பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

இரண்டுக்கும் வேறுபாடு இல்லை; போர் என்று முனைந்து அவசரத்துக்கு மானைத் தேரில் பூட்டினால் அது ஏன் என்று கூடக் கேட்காது; தின்னத்தான் தெரியுமே தவிர வேறு எதையும் பண்ணவே தெரியாது. சப்பாணிகள் பலர் இருக்கிறார்கள்; பணம் படைத்தவர்கள் பலர் உள்ளனர்; குணம் படைக்க வேண்டாமா? அவர்களை அடைந்து ஓர் உபகாரம் என்று கேட்டால் 'வேறு இடம் பார்' என்று கைவிரித்து நிற்பார்கள். உபகாரிகள் பைவிரித்துத் தருவார்கள். இதுவே நற்குடிப் பிறந்தவரின் நற்செயல் ஆகும்.

கோடையில் ஆற்றுநீர் வற்றிவிட்டால் மணல் ஊற்றில் கைவைத்தால் நீர் வேட்கைத் தீரும். அடிசுடும் அந் நாளிலும் நீர் ஊற்றுப் பொய்க்காது; அதுபோல் வறுமை உற்று அவர்கள் வாழ்வு நொடிந்து விட்டாலும் 'இல்லை' என்று சொல்லிக் கதவு அடைக்கமாட்டார்கள். உள்ளதைத் தந்து அதற்குமேல் தர இயலவில்லையே என்று வருந்தி விடை தருவார்கள்.

16. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

(மேன்மக்கள்)

அழகிய வானத்தில் விளங்கி ஒளிவீசும் நிலவும் இளகிய மனமுடைய சான்றோரும் உலகுக்கு ஒளி தருவதில் ஒப்புமை பெறுவர். மாசு மறுவற்றது திங்கள் என்று கூற இயலாது; அதற்குக் களங்கம் உண்டு என்று அதன் கண் துளங்கு இருளால் உலகம் சாற்றுகிறது. அந்தச் சிறு மாசும் தமக்கு ஏற்பட்டால் மேன்மக்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். தம்மைத் துய்மைப் படுத்திக் கொள்வர்; செயலாலும் நினைப்பாலும் தீமை கருத மாட்டார்கள்.