பக்கம்:நாலு பழங்கள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9
வீமனுக்கு இட்ட வேலை

"தங்களுக்குப் பணிவிடை செய்வது என் பாக்கியம்" என்று சொல்லி வீமன் முனிவரை வணங்கினான்.

முதல் நாள் காலையில் அவன் ஒரு கட்டுப் பல் குச்சியை ஒடித்துக் கொண்டு வந்து முனிவரிடம் கொடுத்தான். அதைக் கண்டு அவர் மிகவும் மகிழ்ந்து போனார். பெரிய பெரிய குடங்கள் நிறையத் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான். முனிவர் என்றும் இல்லாத மகிழ்ச்சியோடு நீராடினார். தவம் செய்ய அமர்ந்தார். அவர் கண் விழித்தபோது தம் முன் ஒரு பெரிய குவியலாகப் பழங்கள் இருப்பதைக்கண்டார். அவருக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. வயிறார அந்தப் பழங்களை உண்டார்.

நான்கு நாட்கள் இப்படியே வீமன் செய்துவந்தான். ஒரு நாள் இரவு, "நான் கொஞ்சம் வெளியில் போய்வருகிறேன் ஒரு நாள் வரமாட்டேன், நாளைக்கு வேண்டியவற்றை யெல்லாம் இன்றே கொண்டுவந்து வைத்துவிடுகிறேன்" என்று சொல்லி விடைபெற்றான். தன்னுடைய சகோதரர்களைப் பார்க்கப் போவான் என்று அவர் நினைத்தார்.

சொன்னபடியே இரண்டாவது நாள் வீமன் வந்தான். முனிவர் காலையில், "பல்குச்சி வேண்டும்" என்றார்.

"இங்கே வாருங்கள்" என்று வீமன் முனிவரை அழைத்துக் கொண்டு சென்றான். என்ன ஆச்சரியம்! ஆசிரமத்துக்கு அருகில் ஒரு கால்வாய் ஓடிக்கொண்டி - ருந்தது. அதன் கரையில் ஒரு பக்கம் கருவேல்மரங்கள், மற்றொரு பக்கம் பலவகையான பழமரங்கள்.