பக்கம்:நாலு பழங்கள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
நாலு பழங்கள்

"இது என்ன, புதிய படைப்பாக இருக்கிறதே! இவையெல்லாம் இங்கே எப்படி வந்தன?" என்று ஆச்சரியத்துடன் முனிவர் வீமனை வினவினார்.

"முனிபுங்கவரே, மலையருவியிலிருந்து ஒரு கால்வாயையே பறித்துத் தங்கள் ஆசிரமத்தின் வழியே போகும்படி செய்திருக்கிறேன். இதன் கரையில் இதோ பாருங்கள், கருவேல மரங்கள். தங்களுக்கு வேண்டியபடி குச்சியை ஒடித்துப் பல் துலக்கலாம். இந்தக் கால்வாயில் மனம் போல அமிழ்ந்து நீராடலாம். அதோடு பழ மரங்களை மண்ணோடு போர்த்து வந்து நட்டிருக்கிறேன். ஜபதபம் முடிந்த பிறகு வேண்டிய பழங்களைப் பறித்து உண்ணலாம். நான் செய்ய வேண்டிய வேலை வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்; செய்கிறேன்" என்று சொல்லி கை கட்டி நின்றான் வீமன்.

"அடேயப்பா! நீ அசகாய சூரன் அப்பா! உனக்கு வேலை கொடுக்க நம்மால் முடியாது. எனக்கு வேண்டியவற்றையெல்லாம் ஒவ்வொரு நாளும் தேடி அலையாமல், ஆசிரமத்துக்கு அருகிலே கிடைக்கும்படி செய்துவிட்டாய். நீ தீர்க்காயுளுடன் வாழவேண்டும். இப்போதைக்கு உனக்குக் கொடுக்கும் வேலை. என்னிடம் இல்லை. நீ சௌக்கியமாகப் போய்வா" என்று முனிவர் சொல்லி அவனை வழியனுப்பினார்.

"எப்போதும் எந்த வேலையும் நான் செய்யக் காத்திருக்கிறேன்" என்று சொல்லி அவன் புறப்பட்டு விட்டான்.