பக்கம்:நாலு பழங்கள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17
என்ன தண்டனை கொடுப்பது?

ஒரு நாள் அரசன் அவளிடம், "உன் தம்பியை மந்திரி ஆக்குவதில் எனக்கு ஒரு தடையும் இல்லை. ஆனாலும், அவனுடைய திறமையை ஒருவாறு பரிசோதனை செய்த பிறகு மந்திரி ஆக்கலாம். இல்லா விட்டால், 'தன் மைத்துனனை மந்திரியாக்கி விட்டான்' என்று என்னை உலகம் பழிக்கும்" என்றான்.

"அப்படியே செய்யுங்கள். என் தம்பி அறிவில் மட்டமானவனா? அவன் நன்றாகப் படித்திருக்கிறான். அவனைச் சோதனை செய்து பாருங்கள். அப்போதுதான் உங்களுக்கு அவன் அருமை தெரியும்" என்று அரசி சொன்னாள்.

சோதனை செய்ய ஒப்புக்கொண்டாளே என்று அரசன் மகிழ்ந்தான். எவ்வாறு சோதனை செய்வது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். தன்னுடைய யோசனையை . அரசியிடமும் சொன்னான். அவளும் அப்படியே செய்யலாம் என்று ஒப்புக் கொண்டாள்.

ஒருநாள் அரசன் தன் மைத்துனனை வரச்சொன்னான். அரச சபையில் சில முதியவர்களையும், அந்த முதிய மந்திரியையும் வந்து இருக்கச் சொன்னான். அரசியும் உடன் இருந்தாள். அவளுடைய தம்பி அன்று மிக நன்றாக அலங்கரித்துக்கொண்டு வந்தான். வாட்ட சாட்டமான அவனைக் கண்டு அரசியின் உள்ளம் பூரித்தது. அவன் நிச்சயமாக மந்திரியாகப் போகிறான் என்ற நம்பிக்கை அவளுக்கு உண்டாயிற்று.