பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / மெய் ★ 99



“எங்கே ஸாமீ போகணும்னு சொன்னீங்க?"

"அதுக்குள்ள மறந்துட்டியா? மைலாப்பூர் - மந்தைவெளி”

“மறப்பேனா சாமி? சும்மா விளையாட்டுக்காகக் கேட்டேன்!”

ஸம்ஸ்க்ருத காலேஸ், ராமகிருஷ்ணமடம் ஒவ்வொன்றாகக் கடந்தன. பி.எஸ். ஹைஸ்கூல் வாசலில் ஒரு பிச்சைக்காரன் ஆலமரத்தடியிலிருந்து புறப்பட்டுச் சாலையின் நடுவே நடந்து கொண்டிருந்தான்.

“ஹாரன் கொடப்பா, குருடனோ என்னவோ?”

"சும்மா இரு ஸாமீ. அந்தப் பய உயிரை மதிக்கல்லே, நமக்கென்ன?.”

"ஐய்யோ-அப்பா!...” குரூரமான ஒர் அலறல் ‘ஆட்டோ’ நின்றது.அது அவன்மேல் ஏறி விட்டது. எனக்குச் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. டிரைவர் மலங்க மலங்க விழித்தான்.

தூரத்தில் ஒருபோலீஸ் கான்ஸ்டபிள் ஓடி வருவதைக் கண்டதும் எனக்கு உடம்பு ‘வெட வெட’ வென்று நடுங்கியது. ஒடிவிடலாமா என்றுகூடத் தோன்றியது. ஆனால் அப்படிச் செய்யவில்லை.

"கொஞ்சம் இருங்க, ஒரு தந்திரம் செய்றேன்” என்று அவன் குபீரென்று ஒடி ஆட்டோ ரிக்ஷாவுக்குள் அடியிலிருந்து ஏதோ சீசாவை எடுத்தான். சக்கரத்தின் அடியில் அடிபட்டுக் கிடந்த பிச்சைக்காரனின் கையில் அதைத் திணித்துவிட்டு நின்று கொண்டான். விளக்கொளியில் அது ஒரு பிராந்திபாட்டில் என்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது.

இரண்டே நிமிஷத்தில் கூட்டம் கூடிவிட்டது. போலீஸ்காரர்களும் இரண்டு மூன்று பேர் வந்துவிட்டார்கள்.

எனக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போல அவமானமாக இருந்தது. சமூகத்தில் பேரும் புகழும் பெற்ற ஒரு வக்கீல் இந்த மாதிரிச் சில்லறை விபத்தில் மாட்டிக் கொண்டால் பத்திரிகையிலே தலை உருளுமே..? என் மனம் வெட்கத்தால் குன்றியது!

“ஸார் பாருங்க ஸார்!. பயல் நிறையச் குடிச்சிட்டுத் தன் நினைவில்லாமல் தெருவிலே நடந்து வந்தான். கை வலிக்கிறாப்பலே ஹாரன் அடிச்சேன். பாவிப் பய காதிலேயே போட்டுக்கலை சார். இதோ பாருங்கள். கையிலேகூடப்பிராந்திப் புட்டி வச்சிருக்கான்...!”

டிரைவருடைய நாடகத்தை அந்தக் கூட்டம் உண்மையாகவே நம்பியது.

ஆம்புலன்ஸ் வந்தது. போலீஸ் ஜீப்பும் வந்தது. காரில் அடிபட்டு விழுந்தவனை அதே நிலையில்-பிராந்திப் புட்டியும் கையுமாகப் போட்டோ எடுத்தார்கள். கால் மணி நேரத்தில் பத்திரிகை நிருபர்கள் வேறு காமிராவும் கையுமாக ஓடிவந்துவிட்டார்கள். அடிபட்டவனை ஆம்புலன்ஸ் ஏற்றிக் கொண்டு போயிற்று. நானும் டிரைவரும் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிக் கொண்டு போகப்பட்டோம்.