பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



சப்-இன்ஸ்பெக்டர் எனக்கு ஜாமீன் வேண்டுமென்றார். நான் ஒரு மனிதரை போனில் அழைத்து ஜாமீன் கொடுக்கச் செய்தேன்.அவர் ஸ்டேஷனுக்கு வந்து ஜாமீன் கொடுத்தார். ஆட்டோ டிரைவரை ‘ரிமாண்டில்’ வைத்துவிட்டார்கள். அடிபட்டவன் ஸ்தலத்திலேயே மாண்டிருப்பதாக ஆஸ்பத்திரியிலிருந்து போலீசுக்குச் செய்தி வந்தது.

"நீங்கள் போகலாம். சம்மன் வரும்போது கோர்ட்டில் ஆஜராக வேண்டும்” என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.

‘அந்த டிரைவருக்கு ஜன்ம தண்டனை விதிச்சு, இனி ஆட்டோ ரிக்ஷாவையே தொட முடியாமல் செய்ய வேண்டும்’ என்று நான் முடிவு செய்தேன்.

எதை எதிர்பார்த்துப் பயந்தேனோ அது வீண் போகவில்லை. மறுநாள் எல்லாப் பத்திரிகைகளிலும் அந்த விபத்துச் செய்தி வந்துவிட்டது. ஆனால் ஒர் அதிசயம். விபத்து டிரைவரின் அஜாக்கிரதையால் நிகழ்ந்ததென்றோ, அவன்தான் விபத்துக்குக் காரணம் என்றோ, ஒரு பத்திரிகையாவது எழுதவேயில்லை!

‘விபத்துக்குள்ளான பிச்சைக்காரன் குடிபோதையில் இருந்ததால் ‘ஆட்டோ’ முன் விழுந்துவிட்டான்’ என்ற பல்லவியை எல்லாப் பத்திரிகைகளும் பாடியிருந்தன. சில பத்திரிகைகளில் சாராயப் புட்டியோடு கூடிய அடிபட்டவனின் படம்கூட வெளியாகியிருந்தது.

“மேற்படி வாடகை ஆட்டோவில் பிரயாணம் செய்து கொண்டிருந்தவர் மைலாப்பூரைச் சேர்ந்த பிரபல வக்கில் ஸ்ரீ...... என்பது குறிப்பிடத்தக்கது!” இந்த வரிகளைப் படிக்கும்போது மட்டும் என் மனம் அடித்துக் கொண்ட வேகம் சொல்லி முடியாது.

அன்று மாலையில் அந்த டிரைவரும் ஜாமீனில் வெளிவந்துவிட்டான். வந்ததும் வராததுமாக நேரே என்னிடம் ஓடிவந்தான்.

"சாமீ. நீங்கத்தான் காப்பத்தானும், நிசத்தை வெளியிட்டுட்டீங்கன்னா நான் அகப்பட்டுக்கிடுவேன். பிள்ளை குட்டிக்காரன் மேலே இரக்கம் காட்டுங்க”

“நீ ஒரு ராட்சஸன். உன்னை என்ன செஞ்சாலும் தகும். உனக்கு இரக்கம் ஒரு கேடா?”

“ஐயையோ அப்படிச்சொல்லாதீங்க.நான் சரியானபடி சாட்சியங்களை எல்லாம் தயார்ப்பண்ணிட்டேனுங்க.எல்லாரும் என்வழிப்படி சொல்லச் சம்மதிச்சிட்டாங்க... நீங்களும்...”

"நான் உண்மையைத்தான் சொல்வேன்.”

"ஐயோ சாமீ!....மடத்தனமாகக்குடிச்சிட்டுஅன்னிக்கி அப்படி நடந்துக்கிட்டேன். நடந்ததை எல்லாம் மறந்து மன்னிச்சிடுங்க. பணத்தைப் பணம்னு பாராமே செலவழிச்சு வக்கீலுக்கும் சாட்சியங்களுக்கும் கொடுத்திருக்கேனுங்க.."

"நீ செய்த துரோகம் உனக்கே நன்றாக இருக்கிறதா? ஒரு அப்பாவிப் பிச்சைக்காரனை...”