பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / காலத்துக்கு வணக்கம் ★ 89



உண்டாக்கியதும், அந்த முரட்டு உத்தியோகத்தையே விட்டு விடுவதற்குக் காரணமாயிருந்ததும் 1929ம் வருஷம் நினைவுப் புண்ணுக்கு மருந்து ஏது?

ஜனவரி 1929

அம்பாசமுத்திரம் ரூரல் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றலாகிய புதிது. பழைய சப்இன்ஸ்பெக்டர் அரைகுறையாக வைத்துவிட்டுப் போயிருந்த கேஸ்களின் பைல்களையெல்லாம் புரட்டினேன். தேச சுதந்திரப் போராட்டத்துக்காக ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டுப் பல குற்றங்கள் செய்தவனும் சர்க்காருக்கு எதிராகப் பல சதிச் செயல்களில் தலைமை தாங்கி நடத்தியவனுமான ஊர்க்காடு ரங்கநாதன் என்னும் இளைஞனைப் பற்றிய ஸ்டேட்மெண்டுகள் அதிகமாக இருந்தன. தலைமறைவாகப் பொதிகைமலைக் காடுகளில் திரிந்து வரும் அந்த ரங்கநாதனை முன்பிருந்த இன்ஸ்பெக்டர் எவ்வளவோ முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ரங்கநாதனோடு புரட்சி இயக்கத்தில் சம்பந்தப்பட்டிருந்த பத்துப் பன்னிரண்டு வாலிபர்களின் பெயரும் ‘காத்தியாயினி’ என்ற ஒரு பெண்ணின் பெயரும் ஸ்டேட்மெண்டிலும் பைல்களிலும் இருந்தன.

அப்போது திருநெல்வேலியில் சர்க்கிளாக இருந்தவர் ஒரு ஆங்கிலோ இந்தியர். பாளையங்கோட்டையிலிருந்து என்னை அம்பாசமுத்திரத்துக்கு மாற்றி உத்தரவு போட்டது அவர்தான். நான் மேற்படி ரங்கநாதனையும் அவன் கோஷ்டியைச் சேர்ந்த தேச பக்தர்களையும் சீக்கிரம் எப்படியாவது மடக்கிப் பிடித்துப் போட்டுவிடுவேன் என்று அவருக்கு அளவற்ற நம்பிக்கை.

பிப்ரவரி

மாதம் ஒன்று கழிந்துவிட்டது. இன்னும் உருப்படியாக ஒரு காரியமும் செய்யவில்லை. நாலைந்து நாட்களுக்கு முன் ரங்கநாதன் பிறந்த ஊராகிய ஊர்க்காட்டுக்குப் போய்ச் சில விவரங்களைச் சேகரித்துக்கொண்டு வந்தேன்! ‘காத்தியாயினி’ என்ற பெண்ணைப் பற்றியும் சில முக்கியமான செய்திகள் அங்கே தெரிய வந்தன.

அக்காலத்தில் வண்ணார் பேட்டையில் நாகராஜ சர்மா என்று ஒரு வக்கீல் இருந்தார். அவருக்கு ஒரே ஒரு பெண் காத்தியாயினி. தாயில்லாக் குழந்தை. பெண்ணுக்கு அளவுக்கு மீறிச் செல்லம் கொடுத்து வளர்த்தார். சாதாரணமாக ஹைஸ்கூல் படிப்புக்கே பெண்களை அனுப்புவதற்குத் தயங்கும் காலம் அது, ஆனால் நாகராஜ சர்மாவோ ஹைஸ்கூல் படிப்பு முடிந்ததோடு திருப்தியுறாமல் காத்தியாயினிகைக் காலேஜிலும் சேர்த்துவிட்டார்.

ரங்கநாதனும் காத்தியாயினியும் ஒரே வகுப்பில் ஒரே பிரிவில் படித்து வந்தனர். காத்தியாயினிக்கு அவன் பிரசங்கங்கள் என்றால் உயிர். திலகருடைய கொள்கைகளில் அசைக்க முடியாத ஆர்வம் அவளுக்கு உண்டு.

ஊர்க்காட்டில் இருந்த ரங்கநாதனின் தாயார் நிலபுலன்களிலிருந்து வரும் குத்தகை வருமானத்தை மாதம் தவறாமல் ஒரு குறிப்பிட்ட தொகை வீதம் அவனுடைய படிப்புச்