பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



செலவுக்கு அனுப்புவாள்.ரங்கநாதனின் தகப்பனார் அவன் சிறுவனாக இருந்தபோதே காலமாகிவிட்டார். ‘ரங்கநாதனின் நடவடிக்கைகளால் அவன் படிப்புக் கெட்டுப் போகும்’ என்ற விஷயம் தெரிந்த இரண்டொருவர் அவன் தாயிடம் புகார் செய்தனர். ஆனால் ‘கைக்கு மீறி வளர்ந்துவிட்ட பிள்ளையை எப்படிக் கண்டிப்பது?’ என்று பேசாமல் விட்டுவிட்டாள் அந்த அம்மாள்.

அங்கே நாகராஜ சர்மாவின் நிலையும் அப்படித்தான் இருந்தது. இளமையிலிருந்தே செல்லமாக வளர்ந்த பெண் கண்டிப்புக்கு அடங்கவில்லை. நாலு வார்த்தை இரைந்து பேசினால் கண்ணைக் கசக்கிக் கொண்டு அழ ஆரம்பித்துவிடுகிறாள். வெள்ளை அரசாங்கத்தின் தயவில் நடந்து வந்த கல்லூரியில் எவ்வளவு நாட்கள்தான் இப்படிப்பட்ட மாணவர்களை வைத்துக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள் திடீரென்று ரங்கநாதனும் அவனுக்கு ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட ஏழெட்டு மாணவர்களும் காத்தியாயினியும் காலேஜிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதாகப் பிரின்ஸிபல் அறிவித்தார்.

நாகராஜசர்மா வழக்கத்தை மீறிப் பெண்ணைக் கண்டித்தார். அவளை வீட்டை விட்டு வெளியேறாமல் கண்காணிக்கத் தொடங்கினார்.

ரங்கநாதனோ சஸ்பெண்டு ஆனபின்னும் ஊருக்குப் போகவில்லை. அவனும் கோஷ்டியாருமாகச் சேர்ந்து கொண்டு கைலாசபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்குப் பேசி அதிலிருந்து இயக்க வேலைகளில் ஈடுபட்டனர்.

ஊர்க்காட்டில் முக்கியமாக நான் விசாரித்தறிந்து கொண்ட விவரங்கள் இவ்வளவுதான்.

மார்ச்-ஏப்ரல்-மே

அப்பப்பா! இந்த மூன்று மாதங்களிலும் நான் அலைந்த் அலைச்சல் சொல்லி மாளாது. பாளையங்கோட்டைக்கும் தூத்துக்குடிக்கும் பாபநாசத்துக்கும் அலைந்தேன்.

தன்னைப் பெரிய குற்றவாளியாகச் சர்க்கார் கருதும்படியான வேறோர் காரியத்தையும் ரங்கநாதன் செய்தான். ஒரு விழாவுக்காகத் திருநெல்வேலி கலெக்டர் பாளையங்கோட்டைக்கு விஜயம் செய்ய ஏற்பாடாகி இருந்தது. கலெக்டருடைய கார் தாமிரபரணியில் சுலோசனமுதலியார் பாலத்தைக் கடக்கின்ற சமயத்திலே பாலத்தை வெடிகுண்டுகள் மூலம் தகர்க்க ரங்கநாதன் கோஷ்டியார் சதித் திட்டமிட்டிருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் திட்டம் நிறைவேறுவதற்கு முன்பு இரகசியங்கள் வெளியாகிவிட்டன.

திட்டம் வெளியான அன்று ரங்கநாதன் கோஷ்டியார் தலைமறைவாக ஒளிய இடம் தேடித் திருநெல்வேலியிலிருந்து ஒட்டம் பிடித்தனர். அதே தினம் வண்ணார்பேட்டையில் காத்தியாயினி காணாமற் போய்விட்டாள்.