85. உயிர் காத்த நல்லாள்
கோடை விடுமுறையில் கலாசாலை மூடியிருந்த போது எங்கள் ஊருக்குப் போயிருந்தேன். போன அன்றைக்கு மாலையில், வடக்கே மலையடிவாரத்தில் உள்ள ‘கல்லணை’ வரைக்கும் காலார மலைக் காற்று படும்படி உலாவி விட்டு வரலாமென்று கருதிப் புறப்பட்டேன். பேச்சுத் துணைக்கு உடன் வர ஒருவராவது அகப்பட மாட்டாரா என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது திருவடியா பிள்ளை வந்து சேர்ந்தார். குசலப்பிரச்னமெல்லாம் வழக்கமாக முடிந்தது. ‘அவர் கேட்க வேண்டும்’ என்று காத்திருக்காமல் நானாகவே கருப்பட்டிப் புகையிலை, வெற்றிலை, பாக்கு, முதலிய ‘காணிக்கை’களுக்கு, அருகில் இருந்த கடையில் ‘ஆர்டர்’ செய்து வரவழைத்து விட்டேன். பிள்ளை மனங் குளிர்ந்தார்.
“அப்ப, நீங்க எங்ஙனே இப்பிடிக் கிளம்பிட்டிக?” பாக்கை மென்று கொண்டே திருவடியா பிள்ளை கேட்டார்.
“வேறெங்குமில்லை, பிள்ளைவாள்! இப்படிக் கல்லணையாறு வரை காலாரப் போய் விட்டு வரலாம் என்றுதான்.” “அடேடே! கல்லணையாத்துப் பக்கமா போறிக? நாங்கூட அங்ஙனேதான் பொறப்பிட்டேன்! ‘ஒரெத்த நல்லா கோயில்’ வரை போகணும். அப்பப் பொறப்பிடுங்க, போவலாம்”
இருவரும் கிளம்பினோம். போகிற போக்கில் பேச்சுக்குச் சுவாரஸ்யமான விஷயம் வேண்டுமே என்று நான் பிள்ளையவர்களை ஒரு கேள்வி கேட்டு வைத்தேன். திருவடியா பிள்ளையைப் போன்ற ஒருவர் கூட வரும்போது பேச்சுக்குச் சரியான விஷயம் அகப்படாமலா போகும்?
“ஆமாம் பிள்ளைவாள். எனக்குப் பல நாளாக ஒரு சந்தேகம். உங்களிடம் கேட்க வேண்டும் என்று ஆசை. கல்லணையாற்றுக் கரையிலே இருக்கிற அம்மனோட கோவிலுக்கு ‘ஒரெத்த நல்லா கோவில்’னு இந்தப் பக்கத்தில் பேர் வழங்குகிறதே? அந்தப் பெயரின் அர்த்தமே எனக்கு விளங்கவில்லையே?”
“காலேஜிலே லெக்சரரா இருந்தாப் போதுமுங்களா? இதுக்கெல்லாம் அனுபவமிருந்தா விளங்கும்! இப்போது வழங்கும் பெயர் சரியான பெயரேயில்லை! கல்லணையாற்றுக் கரையிலுள்ள அம்மன் கோவிலின் பெயர் ‘உயிர் காத்த நல்லாள் கோவில்’ என்பது. நாளடைவில் பழகு தமிழில் மருவி, மருவி அது அடைந்த புத்துருவமே ‘ஒரெத்த நல்லா கோவில்’ என்னும் பொருள் விளங்காத பெயர்” என்றார் திருவடியா பிள்ளை.
நா.பா. II -2