86. அரண்டவன் கண்கள்
”பந்தய நாள் நெருங்க நெருங்க முனியாண்டிக்குத் துணிச்சலும், தைரியமும் எதிர்பார்த்ததற்கு மாறாகப் பெருகிக் கொண்டு வந்தன. ஆனால், மன விளிம்பில் இனம் புரியாமல் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் பயச் சலனத்தை அடக்க முடியவில்லை. அந்தச் சலனம் அவனுடைய சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. வென்று விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்து கொண்டிருந்தது.
ஆயிற்று! அமாவாசைக்கு இன்னும் மூன்றே நாட்கள் இருந்தன. பூந்துறை கிராமம் முழுவதும், அந்தப் பந்தயத்தின் முடிவை எதிர் நோக்கிக் காத்திருந்தது என்றால், அதில் சற்றளவும் வியப்பிற்கு இடமே இல்லை. இருந்தாலும் ஒன்று மட்டும் உண்மை - பந்தயத்தின் முடிவு பந்தயம் போட்ட முனியாண்டிக்கு வெற்றியாக இருக்காது; ஏன்? இருக்கவே கூடாது என்பது கிராமத்தின் ஏகோபித்த விருப்பம். ஏனென்ற கேள்வியை எழுப்பினால், முனியாண்டியின் பந்தயம் அத்தகைய முறையில் அமைந்திருந்தது. கிராம மக்களின் தலைமுறை தலைமுறையான நம்பிக்கையைத் தகர்த்து எறிவதாக இருந்தது அவன் பந்தயம். அவன் வெற்றி அவர்கள் நம்பிக்கையைப் பாதித்தது. அந்தப் பாதகம் ஏற்படுவதை அவர்களால் ஒரு போதும் பொறுக்க முடியாது.
ஊறிப் போன பழைய எண்ணங்களை உடனடியாக விலக்குவது என்பது அவ்வளவு எளிய காரியமல்ல. பலருடைய ஒன்று சேர்ந்த நம்பிக்கை ஒரு தனி மனிதனால் எள்ளப்படுவதை எப்படிச் சமூகமாகிய அந்தப் பலர் பொறுப்பார்கள்? எனவே, முனியாண்டிக்கு வெற்றி கிடைத்து விடுமோ என்ற சந்தேகத்தைக் கூடத் தங்கள் மனத்தில் தோன்ற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தனர். நண்பர் திருவடியா பிள்ளை இவ்வாறு கூறி விட்டுப் பொடி மட்டையை அவிழ்த்தார். “அது என்ன ஐயா? அப்படி ஆச்சரியமான பந்தயம்” நான் வியப்புத் தாங்க முடியாமல் கேட்டேன். “அதைத்தானே சொல்லப் போகிறேன்” என்று ஆரம்பித்தார் நண்பர். எனக்கு ஞாயிற்றுக் கிழமைப் பொழுதுபோக்குச் சாதனம் பிள்ளை அவர்தான். இதோ பொடி மட்டையை உள்ளே சொருகிக் கொண்டு அவர் கனைத்த வண்ணம் கதையைத் தொடங்கி விட்டார்.
பிலாவடியார் கோவில் மகிழ மரம் என்றால், பூந்துறையில் அழுத பிள்ளை வாய் மூடும். பரந்து விரிந்த அந்த வயதான மகிழ மரத்தடியில் கோவில் கொண்டிருக்கும் பிலாவடிக் கருப்பண்ண சாமிக்குக் கூட அவ்வளவு ஆற்றல் இருந்ததாகச் சொல்வதற்கில்லை. பொழுது சாய்வதற்கு ஆரம்பித்து விட்டால் போதும், உயிருக்கு ஆசையுள்ளவர்கள் பிலாவடியார் கோவில் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க மாட்டார்கள். யட்சிணிகளுக்கும், மோகினி தேவதைகளுக்கும் அந்த மரம் இருப்பிடம்.