பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

652 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் இயற்கையாகவே துடுக்குத்தனம் நிறைந்த முனியாண்டி இப்படிப் பேசியதில் ஆச்சரியமில்லை. உண்மையில் அவன் அந்தப் பந்தயத்தைப் பற்றிக் கவலைப்பட வில்லைதான். அதற்கு மாறாகச் சந்தோஷப்பட்டான் என்று கூடச் சொல்லலாம். கல்லூரியில் படித்து வந்த அவன் விடுமுறைக்காகக் கிராமம் வந்திருந்தான்.அவனுடைய கல்லூரி வாழ்வின் சூழ்நிலை இந்த அசட்டு நம்பிக்கைகளில் ஒரளவு இகழ்ச்சி ஏற்படும்படி செய்திருந்தது. அதோடுகூட இம்மாதிரி நம்பிக்கைகளைப் பொய்யாக்க வேண்டுமென்ற அழுத்தமான எண்ணம் அவனைப் பற்றியிருந்தது. அதுதான் இந்தப் பந்தயத்தை விளையாட்டும் வினையுமாக ஏற்படுத்திவிட்டது. செங்கப்படையன், முத்தையா, முனியாண்டி இவர்களெல்லாரும் இருபது இருபத்தைந்து வயதுடைய விடலைப் பிள்ளைகள். முன்னிருவரும் கிராமத்திலேயே விவசாயம் செய்து கொண்டிருந்தவர்கள். ஆகவே இது விஷயமாக நம்பிக்கை இழக்க முடியாமல் சூழ்நிலை அமைந்திருந்தது. முனியாண்டியின் வேண்டுகோளின் பேரில் இந்தப் பந்தய ஏற்பாடு கமுக்கமாக நான்கைந்து விடலைப் பிள்ளைகளுக்குள் மட்டும் தெரிந்திருந்தது.காரணம் பெரியவர்களுக்குத் தெரிந்தால் இதை நிச்சயமாகக் கலைத்து விடுவார்கள் என்பதுதான். முனியாண்டி இதை ரகசியமாக முடிப்பதற்கு ஏற்பாடு செய்தது வெறொரு காரணத்தால், அவன் தகப்பனார் காதில் இந்த விஷயம் விழுந்துவிட்டால் அவனை வீட்டை விட்டே வெளியில் போகாதே என்று சொல்லிவிடுவார். பிலாவடியானையும் மகிழ மரத்தையும் பற்றி அவருக்குச் செங்கப்படையனைக் காட்டிலும் அழுத்தமான நம்பிக்கை. ஆனால் எல்லாம் திட்டப்படி நடக்கிறதா என்ன? எப்படியோ விஷயம் ஊர் முழுவதும் பரவியிருந்தது.நல்ல வேளையாகச் சதுரகிரி மகாலிங்கம் வரை போயிருந்த முனியாண்டியின் தாய் தந்தையர் அமாவாசைக்குப் பிறகு தான் வருவதாகச் சொல்லிப் போயிருந்தனர். ஊரில் தன்னைத் தடுத்த வேறு சில பெரியவர்களையும் உறவினர்களையும் மறுக்க முடியாதபடி தன் சாமர்த்தியமான பேச்சால் தடுத்துவிட்டான் முனியாண்டி எப்படியோ பந்தயம் பயங்கரமானது என்று பிலாவடியைப் பற்றிக் கேள்விப்பட்டு நம்பியவர்கள் கருதினாலும் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.மேலே நாம் குறித்தபடி கிராமமே எதிர்பார்த்தது என்றுதான் சொல்லவேண்டும். . அமாவாசை வந்தது. குறித்தபொழுதில் சாவடியில் 'நண்பர்கள் கூடினர். சாவடிக்கு வெளியே ஒரே மைக் குழம்பாயிருந்தது. ஒன்பதரை மணிக்கு முனியாண்டி சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான். செங்கப்படையானுக்கு முனியாண்டியின் முகச்சாயலில் பயத்தின் அறிகுறி சிறிதும் இருப்பதாகவே தெரியவில்லை. “பய! போய்ட்டு வந்தாலும் வந்திடுவான் போலிருக்கே” என்று எண்ணினான். புதிதாகக் கரண்ட் அடைத்த ஒரு மூன்று ஸெல் பாட்டரியை முத்தையா முனியாண்டியிடம் நீட்டினான். செங்கப்படையன் சாவடி மாடப் பிறையிலிருந்து தயாராக வைத்திருந்த சுத்தியலையும், சாண் நீள ஆணி ஒன்றையும் முனியாண்டியிடம் கொண்டுவந்து கொடுத்தான். முனியாண்டி புன்சிரிப்புடன் அவைகளை வாங்கிக் கொண்டான்.