பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87. தீமிதி

ங்குனி மாதம் கோடை வெய்யில் கொளுத்து கொளுத்தென்று கொளுத்திக் கொண்டிருந்தது. அமாவாசைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. பங்குனி அமாவாசையன்று துரோபதை அம்மன் கோவில் தீமிதி உற்சவம். தலைமுறை தலைமுறையாகக் கிராமத்தில் நடந்து வரும் திருவிழா அது. ஊராருக்கு அந்தத் திருவிழாவில் பயபக்தி அதிகம். கோடை வெப்பத்தால் உயிர்களைச் சூறையாடும் அம்மை, கொப்புளிப்பான், வைசூரி போன்ற நோய்கள் ஊரில் பரவாமல் தடுக்கும் தெய்வீக முயற்சியாக இந்தத் திருவிழாவைக் கருதி வந்தனர்.

அந்த வருட உற்சவத்தை நடத்துவது பற்றி விவாதிப்பதற்காகக் கோவில் குறட்டில் ஊர்த் தலைக் கட்டுகள் கூடியிருந்தனர். நாட்டாண்மைக்கார மூப்பனார் கூட்டத்திற்கு நடுவில் வசூல் நோட்டும் பென்சிலும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். கணக்குப் பிள்ளை உற்சவத்துக்கு வேண்டிய சாமான்களை லிஸ்ட் எழுதிக் கொண்டிருந்தார். தலைக் கட்டுக்களில் ஒருவர் எழுந்திருந்து கேட்டார்,

“என்னங்க மூப்பனாரே! இந்தப் பெரிய பண்ணையாரு மகன் ராசகோவாலுப் பய ஏதோ நாலு விடலைப் பசங்களோடு சேர்ந்து கட்சி கட்டிக்கிட்டுத் திரியறானே! தீமிதியிலே கலகமில்ல உண்டாகும் போல இருக்குது?”

“அதென்ன விசயம்? எனக்குத் தெரியாதே. இப்பத்தான் கேள்விப்படறேன்...”

“பய பட்டணத்துலே நாலு கோண எழுத்துப் படிக்கிறானில்லே. அதுலே புத்தி தடுமாறித் திரியறான். நாம் தீ மிதித்துக் காட்டறாப் போலவே அம்மன் கோவில் நிபந்தனைகளை மீறி விரதம், கிரதம் இல்லாமே அவங்களும் தீ மிதிச்சுக் காட்டப் போறானுகளாமே?”

“முடிஞ்சாக் காட்டட்டுமே? யாரு வேண்டாமின்னது?” பேச்சு வளர்ந்து கொண்டே போயிற்று. முதலில் பேசியவர் மீண்டும் ஆரம்பித்தார்.

“அது மட்டும் இல்லீங்க! வழக்கம் போலத் துரோபதை அம்மன் கோவிலுக்கு முன்னாலே மிதிச்சாத்தான் சுடாதுங்கறது பொய்! விரதம், அம்மன் அருள் இதுகள்ளாம் சுத்தப் புரட்டு. ஊருலே இந்த மூட நம்பிக்கைங்களை ஒழிச்சிறணும். எங்களுக்குத் துரோபதை அம்மன் மேலே நம்பிக்கை கெடையாது. நாங்க உற்சவத்துலே தீ இறங்கறதுக்காக விரதமிருக்காமே, அம்மனைக் கும்பிடாமே, கோவில் விதியை மீறி, இறங்கிக் காட்டறோம்.அப்பவாவது ஊராருக்கு இந்தப் புரட்டெல்லாம் புரியும் என்று சொல்லிச் சவால் விட்டிருக்கானாம்.”