பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

660 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் செலுத்தணும். உனக்குப் பிடிச்சா இதிலே சேரு. இல்லாட்டா விலகிக்க. எங்களையும் கெடுக்காதே."-இராஜகோபால் இப்படி ஆத்திரமாகப் பேசவே, கேள்வி கேட்டவன் ‘கப்சிப் என்று அடங்கிவிட்டான்.மற்ற வாலிபர்களும் இராஜகோபாலையே ஆதரித்துப் பேசியதால், அவன் மேற்கொண்டு விவாதிக்க முடியாமல் போயிற்று. இராஜகோபால் கோஷ்டியாரின் போட்டித் தீ மிதிப்பு வைபவத்திற்குப் பகுத்தறிவுத் தலைவர் ஒருவர் தலைமை வகிக்க வருவதாக ஒப்புக்கொண்டார். ஏற்பாடுகள் எல்லாம் புதிய முறையில் நடந்தன. ஊரார் விழாவுக்கு முன்னறிவிப்பாக வேப்பிலைத் தோரணமும், கொடிகளும் கட்டினார்கள் என்றால், இவர்கள் அழகான காகிதத்தில் நோட்டீஸ் அச்சடித்து வழங்கினார்கள். இன்னார் தலைமையில் கீழ்க் கண்ட முற்போக்கு இளைஞர்கள் பகுத்தறிவுத் தீ மிதிப்பு நிகழ்த்திக் காட்டுவார்கள். அன்பர்கள் தவறாது வருக என்று நோட்டீஸ் கூறியது.இன்னும் துரோபதையம்மன் கோவில் தீ மிதிப்பைக் கேவலப்படுத்தும் அவதூறு நிறைந்த வாக்கியங்களும் அந்த நோட்டீஸிலேயே எழுதப்பட்டிருந்தன. ஊராரோ, கோவில் தலைக்கட்டுக்களோ, இந்தச் சில்லறை விஷமங்களைப் பொருட்படுத்தாமல், தங்கள் ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தனர். இராஜகோபாலின் பகுத்தறிவு இளைஞர்கள் ஆவேசமாக வேலை செய்தனர்.வெறும் நோட்டிஸோடு நின்றுவிடவில்லை.பெரிய பெரிய சுவரொட்டிகளை விளம்பரமாக ஒட்டி, ஏதோ தேர்தலுக்குப் பிரசாரம் செய்கிற மாதிரிச் செய்தனர். உள்ளூர் டுரிங் சினிமாவில் சிலைடு' கொடுத்து விளம்பரம் காட்டினர். காரில் "பேட்டரி ஸெட் பொருத்தி மைக் வைத்து முழக்கினார்கள். இதன் பயனாக 'நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ என்பதுபோல் - போலித் தீ மிதிப்புக்காரர்கள் செய்த இந்த ஏற்பாடுகளால் அசல் தீமிதிப்பும் பிரமாதமான விளம்பரப் பிரக்கியாதியை அடைந்துவிட்டிருந்தது. அன்று பங்குனி அமாவாசை கோயில் தீ மிதிப்பு மாலை ஆறரை மணி சுமாருக்கு மங்கல வேளையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.போட்டித் தீமிதிப்பு எட்டரை மணிக்கு மேல் வைக்கப்பட்டிருந்ததனால் இரண்டு வைபவங்களையும் எல்லோரும் காண்பதற்கு வசதியாக இருந்தது. - குரவை ஒலியுடனும், 'மாரியம்மன் தீ மிதிப்புக்கும்மி என்ற புஸ்தகத்திலுள்ள பாடலைப் பாடிக்கொண்டும் கோவில் தீ மிதிப்பு ஆரம்பமாயிற்று. அதைக் காண நிறைந்த கூட்டம் கூடியிருந்தது. அதெற்கென்று விரதமிருந்து ஒரு மண்டலம் நியம நிஷ்டையோடு வாழ்ந்த பத்துப் பதினைந்து வாலிபர்கள் தீ மிதிக்க வந்தனர். படிப்பில்லாதவர்கள் இவர்கள். கிராமாந்தரத்துப் பிள்ளைகள் பெற்றவர்களுக்கு அடங்கியவர்கள். பெரியவர்கள் சொல்வதில் கெடுதி இருக்காது என்று நம்புகிறவர்கள். வயதுக்கு மதிப்புக் கொடுத்து ,வணங்குகிறவர்கள். இவ்வளவுதான் இவர்களைப் பற்றிச் சொல்ல முடியும். உடம்பில் மஞ்சளும், சந்தனமும் அரைத்துப் பூசி, வேப்பிலை கட்டிக்கொண்டு அம்மனை வணங்கிச் சன்னதம் வந்த நிலையில் ஒவ்வொருவராகத் தீக்குழியில் இறங்கி