பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / தீமிதி : 661 மெல்ல நடந்து கரையேறினர். குழி நிறைய, இடைவெளி சிறிதும் இன்றித் தகதகவென்று கனிந்த நெருப்புக் கங்குகள் பரப்பப்பட்டிருந்தன. பூக் குவியலின்மேல் நடக்கிற மாதிரி எப்படித்தான் முகத்தைச் சுளிக்காமல், வேதனையின்றி நடந்தார்களோ? பாதத்தின் அடியில் சிறு தீப்புண், கொப்புளம், ஒன்றும் ஏற்படவில்லை. மண்ணில் நடந்து வந்த பாதம் மாதிரி மாறாமல் இருந்தது. கோவில் தீ மிதிப்பு வெற்றிகரமாக முடிந்த பிறகு, கோவில் தலைக்கட்டுகள், தீ மிதித்தவர் உட்படக் கூட்டம் முழுவதும் நேரே பகுத்தறிவுப் படிப்பக வாசலுக்கு வேடிக்கை பார்க்கப் போய்ச் சேர்ந்தது. கோவில் தீ மிதிப்புக்குக் கூடியிருந்ததைவிட அதிகமான கூட்டம் படிப்பக வாசலில் கூடியிருந்தது. முந்திய தீமிதிப்பில் பூசாரி மாலை போட்டுப் பரிவட்டம் கட்டிச்சம்பிரதாயப்படி தீ மிதியை ஆரம்பித்து வைத்தது போல், தலைவர் முன்னுரை கூறி, ஆசி மொழிந்து, தீ மிதிப்பை ஆரம்பித்து வைத்தார் இங்கே நோட்டீஸில் வரிசையாகப் பன்னிரண்டு பெயர்களும் அவர்கள் தீக் குழியில் இறங்கிக் கரையேறுவதற்குரிய நேரமும், எல்லாம் நவீன முறையில் நிகழ்ச்சி நிரலாகக் குறிக்கப்பட்டிருந்தன. பெரிய சொற்பொழிவுகளில் பேசுபவர்களுக்கு நேரம் குறித்து நிகழ்ச்சி நிரல் அச்சிடுவார்கள் அல்லவா? அதுபோல ஒவ்வொரு தீ மிதிக்கும் ஆளின் பெயருக்கெதிரே இரண்டரை நிமிஷ அவகாசம் குறித்திருந்தது. மொத்தம் பன்னிரண்டு பேராகையால், ஆளுக்கு இரண்டரை நிமிஷம் வீதம் அரைமணி நேரத்தில் விழாவை முடித்துவிடக் கருதியிருந்தான் இராஜகோபால். இராஜகோபால் தீ மிதிப்பு விழாவுக்கு வந்திருந்த தலைவரை வரவேற்று மாலை அணிவித்தான்.முன் வரிசையில் அமர்ந்திருந்த நாலைந்து பேர் கைகளைப் படபடவென்று தட்டிக் கரகோஷம் செய்தனர். அவ்வளவு பெரிய கூட்டத்தில் அந்தச் சிறிய கரகோஷம் எடுபடவில்லை. தலைவர் பேச ஆரம்பித்தார் : "தோழர்களே! தோழியர்களே! நண்பர் இராசகோபாலனாரின் துணிவை நான் பாராட்டுகின்றேன். உங்கள் ஊர் இளைஞர்களின் சீர்திருத்த நோக்கம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. சமூகத்தின் பழைய கட்டுத் திட்டங்களை உடைத்துத் தகர்த்து எறிய முன் வந்திருக்கும் உங்கள் ஆவேசம் வாழ்க, தெய்வத்திற்கும் தீ மிதிப்புக்கும் சம்பந்தமில்லை என்பதை இன்று இங்கே பன்னிரண்டு பேர் நிரூபிக்கப் போகிறார்கள்.” என்று சுருக்கமான முன்னுரைக்குப் பின் தலைவர் தம் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். - ஏதோ சர்க்கஸ், தெருக் கூத்துப் பார்க்கிற மாதிரிக் கூட்டம் அந்தத் தலைவரையும், ‘மைக்’, மேஜை, நாற்காலி, சோடாபாட்டில், ரோஜாப்பூ மாலை எல்லாவற்றையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தது. இராஜகோபால் நிகழ்ச்சி நிரலைக் கையிலெடுத்துக் கொண்டு, நிமிர்த்திய மார்புடன் ஜிப்பாவின் இரண்டு பக்கத்துப் பையிலும் கைகளை நுழைக்க முயன்று கொண்டே மைக்குக்கு முன் கம்பீரமாக வந்து நின்றான்.