பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

662 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் "அன்பர்களே! சற்று முன்பு வேறோர் இடத்தில் கடவுளின் பெயரால் மனிதர்களின் அறிவை ஏமாற்றும் தீமிதிப்பை நீங்கள் கண்டீர்கள். இதோ பகுத்தறிவின் பெயரால், புதுமையின் பெயரால், தன்னம்பிக்கையின் பெயரால், தெய்வத்தை நம்பாமல் ஆண்மையை நம்பி, நாங்கள் நடத்தும் தீ மிதிப்பையும் பார்க்கப் போகிறீர்கள். உண்மை எது என்பதை இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்குப் புரிய வைக்கிறோம். இப்போது தீமிதிப்புக்கு முன்வந்திருக்கும்தோழர்களின் பெயரை நான் வரிசையாகப் படிப்பேன். ஒவ்வொரு பெயரையும் நான் படித்தவுடன் அந்தப் பெயருக்குரிய தோழர் தீக்குழியில் இறங்குவார்.இரண்டரை நிமிஷம் குழியில் நடந்து,அவர் மேலே ஏறினதும் நான் மற்றொருவர் பெயரைப்படிப்பேன்.இப்படியே நிகழ்ச்சி நடைபெறும் அன்பர்கள் கண்டு எங்கள் முயற்சியைப் பாராட்ட வேண்டும்.” “முதல் பெயர், கே. ஆறுமுகப்பெருமாள்." இராஜகோபால் பெயரைப் படித்துவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆறுமுகப்பெருமாள் வரவில்லை. “டேய் சம்புலிங்கம் ஆறுமுகப்பெருமாள் எங்கேடா? பார்த்துவரச் சொல்லு, சமயத்துக்கு எங்கேயோ தொலைஞ்சி போயிட்டான்' சம்புலிங்கம் மேடையின் பின்புறம், படிப்பகத்தின் உட்புறம் முதலிய இடங்களில் போய்த் தேடிவிட்டு "அண்ணே! ராசகோவாலு அண்ணே ஆறுமுகப் பெருமாளு சோளக்கொல்லைக் காவலுக்குப் போகணும்னு சொல்லிக்கிட்டிருந்தான், போயிருப்பான்.அவனை விட்டிட்டு அடுத்த பேரைப் படிங்க இனிமே எங்கே வரப் போறான்?' என்று திரும்பிவந்து இராஜகோபாலிடம் கூறினான்.இராஜகோபாலுக்கு முகம் தொங்கிவிட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, "முதலில் வாசிக்கப்பட்ட ஆறுமுகப்பெருமாள் எதிர்பாராத அசெளகரியங் களால் வர இயலாமற் போனதால், அடுத்து, ஆர்.எஸ்.சுப்பையா தீக்குழி இறங்குவார்” என்று மைக்கில் கூறினான். கூட்டத்தில் அதைக்கேட்டதும் அலை அலையாக ஏளனச்சிரிப்பொலி எழுந்தது. 'ஆய்-ஊய் என்று கூச்சலும் கிளம்பியது. சீட்டி அடித்தார்கள் சிலர். இராஜகோபாலுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. அந்தச் சமயத்தில், “ஆர்.எஸ். சுப்பையாவுக்குத் தலை வலியாம். படிப்பகத்துக்குள்ளே படுத்து முனகிக்கிட்டிருக்காரு. அவராலே முடியாதாம். வேறே யாரையாச்சும் அவருக்குப் பதிலா இறங்கச் சொல்லுவிங்களாம்” என்று சம்புலிங்கம் வந்து சொன்னான். இது இராஜகோபாலுக்கு இரண்டாவது இடியாகத் தலையில் விழுந்தது. "அன்பர்களே! திரு ஆர்எஸ்.சுப்பையா அவர்கள் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதால்." என்று அவன் பேசி முடிப்பதற்குள், இந்த விழா அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது என்று சொல்லிக் கூட்டத்தினிடையேயிருந்து எவனோ ஒரு குறும்புக்காரன் இராஜகோபால் தொடங்கிய வாக்கியத்தைப் பூர்த்தி