90. எத்திராஜுலுவும் ‘L’ போர்டும்
1962ம் வருஷத்தின் தொடக்கத்தில் மார்ச் மாதத்தில் சேர்ந்தாற் போல நாலைந்து நாள் விடுமுறை வருகிறாற் போல் வாய்த்த சுபயோக சுபதினம் ஒன்றில். உதயாதி நாழிகை 7 மணிக்கு மேல் ஒரு கப் காபியைக் குடித்து விட்டு. இரண்டு மூன்று பெருமூச்சுக்களையும் மலைப்போடும், பயத்தோடும் வெளித் தள்ளி விட்டு அதன் பின் உயர்திரு. டாக்டர் எத்திராஜுலு, எம்.ஏ.பி.எச்.டி. அவர்கள் ‘கார் டிரைவிங்’ பழகிக் கொள்ளத் தொடங்கினார்கள்.
‘அது சரி! புரொபலர் எத்திராஜுலு எப்போது கார் வாங்கினார்?’ என்று உங்களில் யாருக்காவது கேள்வி கேட்பதற்குத் தோன்றலாம்.இந்தக் கேள்வியை நீங்கள் இன்றையிலிருந்து சரியாக இரண்டரை மாதத்துக்கு முன்னால் - அதாவது 75 நாட்களுக்கு முன்னால் கேட்டிருக்க வேண்டும்.
சரியாக 1961ம் வருஷம் டிசம்பர் மாத நடுவில் புரொபலர் எத்திராஜுலு ஒரு ‘ஸெகண்ட் ஹேண்ட்’ கார் வாங்க வேண்டுமென்று தீர்மானித்து, அதற்காகச் சுமார் 4500 ரூ பணமும் ஒதுக்கி வைத்து விட்டுக் கார் புரோக்கர்களிடமும் சொல்லி வைத்தார். 1962ம் இங்கிலீஷ் வருடமும் அதோடு உயர்திரு. எத்திராஜுலு அவர்கள் வீட்டு வாசலில் சேர்ந்து வந்து நின்றன. டிரைவராக முனியப்பனும் வந்து சேர்ந்தான். மாதம் ஒன்றிற்கு 2000 ரூபாய் வருமானம் உள்ள ஆள் கூட ஒரு பழைய மாடல் காரைக் கட்டித் தீனி போடுவது சிரமமான காரியம் என்று என்னைப் போல் நண்பர்கள், வேண்டியவர்கள் எல்லாம் எவ்வளவோ அறிவுரை கூறியிருந்தும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் வெறும் 800 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கக் கூடிய உயர்திரு. டாக்டர் எத்திராஜுலு எம்.ஏ.பி.எச்.டி. அவர்கள் கார் வாங்கியதற்குக் காரணம் உண்டு. இத்தனை வயதுக்குமேல் அவருக்கு இன்னதென்று புரியாததும், புரிந்த வரையில், ஒரு கார் இருந்தால் தீரக் கூடியதுமான வியாதி ஒன்று வந்து தொலைத்திருந்தது. இருந்தாற் போலிருந்து பத்துக் கெஜ தூரம் நடந்தாலே கண்களை இருட்டிக் கொண்டு மயக்கமாக வந்தது. இரண்டொரு நாள் பிளாட்பாரத்தில் நடக்கும் போதே அவர் தலை சுற்றி மயங்கி விழ நேர்ந்து, கல்லூரிப் பையன்கள் சைக்கிள் ரிக்ஷாவில் தூக்கிப் போட்டு அவரை வீட்டில் கொண்டு வந்து விட நேர்ந்ததும் உண்டு.
இந்த மயக்கத்துக்குப் பயந்துதான் அவர் கார் வாங்கினார்.கார் வாங்கிய பின்போ அவருக்கு வேறோர் விதமான மயக்கமும் வந்து சேர்ந்தது. அதற்கு ஆகிய செலவைக் கணக்குப் பார்த்த போது ‘கிர்ர்’ரென்று தலை சுற்றியது; மாதிரிக்கு எத்திராஜுலு அவர்களின் டைரியில் கண்டபடி 1962ம் வருடம் ஜனவரி, பிப்ரவரி, இரு மாதங்களுக்கும் கார் வகையில் அவருக்கு ஆன செலவு விவரங்களைப் பார்க்கலாம்.