பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————

இரண்டாம் தொகுதி/எத்திராஜுலுவும் L போர்டும் 🞸 683

நீயே சவாரி பண்றாப்லே இருக்கணும்... டிரைவிங் படிச்சுக்க லார் பட்டணத்திலே கெய்வி இருக்காளே... பல்லுப்போன கெய்வி... அவகூட ஸ்டியரிங் புடிச்சிக்கினு ஒட்டிக்கினு போறா ஸார்...”

“ரொம்ப கரெக்ட் முனியப்பன்! நாளைக்குக் காலையில் ஏழு மணியிலிருந்து எனக்கு டிரைவிங் சொல்லிக் கொடுக்க வந்துடு...” என்று கடைசியில் அவனைக் குருவாக அங்கீகரித்தார் எத்திராஜுலு எம்.ஏ.பி.எச்.டி.

“இது என்னா படா வித்தை?...ரெண்டு நா..கத்துக்கினியானா... அப்புறம் நீயா. ஸ்டியரிங்கைப் பிடிச்சுக்கினு போவே..” என்று சொல்லிக் கொண்டே மறுநாள் காலையில் தானே இரண்டு பெரிய எல் - போர்டுகளும் எழுதி எடுத்துக் கொண்டு வந்துவிட்டான் முனியப்பன். அவன் இந்த விஷயத்தைப் பிரஸ்தாபிப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தாமாகவே ‘டிரைவிங்’ கற்றுக் கொள்வதற்காக ‘டெம்ப்ரரி லேர்னிங் லைசென்ஸ்’ தயாராக எடுத்து வைத்திருந்தார் எத்திராஜுலு.

எனவே ஆரம்பத்தில் கூறியபடி மேற்கண்ட சுபயோக சுபதினத்தில் காரின் நான்கு சக்கரங்களிலும் எலுமிச்சம் பழங்களை வைத்து நசுங்கச் செய்தபின்-டிரைவர் முனியப்பனுக்குக் குருதட்சிணையாக 2 ரூபாயும் கொடுத்து - அவனைப் பக்க்பலமாக அருகில் அமர்த்திக் கொண்டபின் எத்திராஜுலு ‘டிரைவிங்’ பழகலானார்.

“ஸாரு! பராக்குப் பார்க்காதே. இங்கேயே என்னையே கவனி: ‘கீ’‘’யை ஆன்லே போட்டுக்க, ஸ்டார்ட்டரை இஸ்த்துக்கினு... அதுக்கு மின்னாடியே ‘கியரை’ நியூட்ரல் பண்ணிக்குவே... பண்ணிக்கினியானா... என்ஜீன் ஸ்மூத்தா ஆடும்... அப்புறம். ‘க்ளச்’ பெடலைக் காலாலே அமுக்கிக்கினு... ‘ஃபர்ஸ்ட்’ கியரைப் போடு. ‘கிளச்’ மேலே இருக்கிற காலை மெல்லக் கொஞ்சமா எடு... இன்னொரு காலாலே ‘ஆக்ஸிலேடரை’ அமுக்கி ஸ்டடியா ரேஸ்... பண்ணு...”

‘டிரைவிங்’ தீட்சை கொடுக்கும் ஞானகுருவாகிய முனியப்பன் கூறியபடியே இத்தனை காரியங்களையும் உயர்திரு எத்திராஜுலு அவர்கள் செய்து முடித்த பின்னும்... பிடிவாதக்கார விருந்தாளியைப் போலக் கார் நகராமல் நின்ற இடத்திலேயே நின்றுவிட்டது. அண்டசராசரங்களும் நடுங்குகிறாற்போல என்ஜின் விட்டுவிட்டுக் குதிப்பது மாதிரி ஒசை வந்தது. அந்த ஒசை வந்த மறுகணமே என்ஜின் ‘ஆஃப்’ ஆகிவிட்டது. அவ்வளவுதான்! எத்திராஜுலு அவர்களின் பூர்வாசிரமத்து டிரைவரும் தற்போதைய ஞானகுருவும் ஆகிய முனியப்பனுக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிட்டது.

“இன்னா ஸார். உன்னோட படா பேஜாராப் போச்சு... இதே புரியிலேன்னா காலேஜியிலே நீ எப்படி ஸார் அத்தினி பசங்களுக்குக் கத்துக் குடுக்கிறே?... இங்கே பாரு...ஸார்! ஆக்ஸிலேட்டரை அமுக்கி ரேஸ் பண்றப்போ... ‘க்ளச்’ மேலே இருக்கிற காலை மெதுவா... நெதானமா எடுக்கணும்... பொசுக்குனு எடுத்திட்டியோ வண்டி ‘ஆஃப்’ ஆயிப்பூடும்... எங்கே... இப்ப கரெக்டா... செய்யி பார்க்கலாம்...”