பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

684 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்களை அடக்கியாண்டு பயப்படாமல் வகுப்பு நடத்தும் புரொபஸர் எத்திராஜூலு! இப்போது இரண்டு ‘எல்’ போர்டுகளிடமும் ஒரு கிழ டிரைவர் முனியப்பனிடமும் மாட்டிக் கொண்டு விழித்தார்.

இரண்டாவது முறையாக இப்போது பதறாமல் ‘குரு’வின் கட்டளைப்படியே எல்லாம் செய்து கியரைப் போட்டபோது... ‘கர்ர் புர்ர் சர்ர்...’என்று இன்னும் எப்படி எப்படியெல்லாமோ சேர்ந்தும் கர்ணகடுரமான ஓசை ஒன்று எழுந்தது. உடனே டிரைவர் முனியப்பன் எத்திராஜுலுவை அடித்துவிடுவது போல் கூப்பாடு போடத் தொடங்கி விட்டான்.

“‘க்ளச்சை’ நல்லா அமுக்காமலேயே கியர் போடுறியே ஸார்! சர்த்தான்... நீ இந்த லட்சணத்துலே வண்டி கத்துக்கினியானா நாலே நாளுலே இந்த வண்டியைக் காயலான் கடைக்குத் தள்ளிக்கினு போயிடலாம்”...என்று கேலியில் இறங்கிவிட்டான் டிரைவர் முனியப்பன்.

அன்று இவ்வளவில் கல்லூரிக்குப் போக நேரமாகிவிட்டதனால் மறுபடி அடுத்த நாள் காலை மீண்டும் தொடர்ந்து கற்றுக் கொள்ளத் தொடங்கலாமென்று தீர்மானித்துக் கொண்டு குளித்துச் சாப்பிட்டுவிட்டுக் கல்லூரிக்குப் புறப்பட்டார் எத்திராஜூலு.கல்லூரிக்குப் போகும்போது அவர் தன்னோடு இருந்து தான் வண்டி ஒட்டுகிற திறனைக் கவனிப்பதற்காக அவரை முன் ஸீட்டிலேயே உட்கார்ந்து கொள்ள வேண்டுமென்று கண்டிப்பாகக் கட்டளையிட்டு விட்டான் டிரைவர் முனியப்பன்.

“நீ ஒண்ணுமே செய்ய வேணாம் ஸார்!நான் எப்படி ஒட்டுறேன்னு பார்த்துக்கினே வந்தியானாக்கூடப் பத்து நாளிலே தேறிடுவே...” என்று அவன் சொல்லியபோது பி.எச்டி பட்டம் வாங்க ‘தீஸிஸ்’ எழுதினதைவிடக் கஷ்டமான காரியமாக அவருக்குத் தோன்றியது கார் டிரைவிங். கடந்த இரண்டு மூன்று நாட்களாக லாகவமாகவும், பயப்படாமலும், மிக அலட்சியமாகவும் தாங்களே டிரைவ் செய்து கொண்டு வரும் ‘ஒனர்’களைப் பார்க்கும்போதெல்லாம் அவ்வளவு சுலபமாக டிரைவ் செய்யத் தெரிந்து கொண்டுவிட்டதற்காக அவர்கள் மேலெல்லாம் பொறாமைப்பட வேண்டும்போல் தோன்றியது அவருக்கு. நாலு காராவது நாலு லாரியின் மேல் மோதி அப்படி மோதுவதன் மூலம் உலகத்தில் கார் டிரைவிங் தெரியாத மடையன்கள் இன்னும் நாலு பேராவது இருக்கிறான்கள் என்று நிரூபணமாக வேண்டும் போல அவருக்கு ஆசையாகவும் இருந்தது. தம்முடைய காரில் தாம் உட்கார்ந்து கொண்டு போகும்போது எதிரே வருகிற ஒவ்வொரு புத்தம் புதிய காரையும் ஒரு லாரியோடு மோதுவதாகக் கற்பனை செய்து மகிழும் குரூரமான சந்தோஷத்துடனே ‘டிரைவிங்’ போவது கற்றுக் கொள்ளத் தொடங்கியபின் இந்தச் சில தினங்களாக அவருடைய வழக்கமாகியிருந்தது.

மூன்றாவது நாள் காலை ‘டிரைவிங்’ கற்றுக் கொள்ளும்போது அவர் வண்டியை ஒழுங்காக ‘ஸ்டார்ட்’ செய்து ‘கியர்’ போட்டு மெயின் ரோட்டில் கொஞ்சதுரம்கூட ஒட்டிவிட்டார். அப்புறம்தான் பிடித்தது சனியன். எதிரே வந்த பிரம்மாண்டமான