பக்கம்:நித்தியமல்லி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1. பரிசை மறுத்தாள் கன்னி!

ழகின் கம்பீரமான மிடுக்குடன் அந்த நிலைக் கண்ணாடியின் முன்னே வந்து நின்றாள் தமிழ்ச் சுடர். அவளுடைய எழிலை அந்தரங்கமான அன்புடன் அக்கண்ணாடி வாங்கிக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், அந்தக் கண்ணாடிக்கு அவ்வளவு அழகு கை கூடியிருக்க முடியுமா? அவள் கொண்டிருந்த தூய்மையான அழகுக் கவர்ச்சியின் பிரதிபலிப்பையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள் அவள்; பார்த்து சிரித்துக் கொண்டேயிருந்தாள்.

பூச்சரத்தைச் சீர்படுத்த, கழுத்தை லேசாகப் பின் வசமாகச் சாய்த்தாள். முடியின் சுமை முதுகுக்கு அணை கொடுத்தது. பூச்சரம் இப்போது வெகு நளினத்துடன் அமைந்து விட்டது. பதக்கத்தில் கூடியிருந்த வெள்ளைக் கல், பச்சைக்கரைக் கட்டுக்கு ஓர் எடுப்பைத் தந்தது.

மார்பில் தவழ்ந்து நெளிந்து கொண்டிருந்த ‘டெரிலின் நைலக்ஸ்’, நழுவத் துடித்தது. அதைப் பொய்க் கோபத்துடன் செம்மை செய்தாள் தமிழ்ச் சுடர். தனக்குத் தானே குனிந்து பார்த்துக் கொண்டிருந்த அவள் நிமிர்ந்தாள். நயமானதொரு புன்னகை அந்த மிகுந்த அதரங்களின் கரைகளை அணைத்திருந்தது. ‘நெள ஐ ஆம் ஆல்ரைட்’—அவள் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/6&oldid=1509680" இலிருந்து மீள்விக்கப்பட்டது