பக்கம்:நித்திலவல்லி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

107



சென்று கேட்டபோது, ‘மீண்டும் அங்கே கூடத்துக்கு வந்தால் தெளிவாக விளக்குகிறேன்', என்று மறுமொழி கூறித் தன்னைக் கூடத்துக்குக் கூப்பிட்டுக் கொண்டு வந்து ஒன்றுமே சொல்லாமல், அழகன்பெருமாள் சிரித்துக் கொண்டு நின்றதைக் கண்டுதான் அவனுள் கோபம் மூண்டிருந்தது. இந்த மதுரை மாநகரின் புகழ் பெற்ற கணிகை இரத்தினமாலை, உப வனக்காப்பாளன் அழகன்பெருமாள் எல்லாருமே பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணைக்குக் கட்டுப் பட்டவர்கள் என்பதனால், இவர்கள் மேல் அளவற்று ஆத்திரப்படவோ, சினம் கொள்ளவோ முடியாமலும் இருந்தது. சிறிது நேரத்திற்கு முன் சந்தனம் அரைக்கும் பகுதியில் சற்றே நிதானம் தவறி, அழகன்பெருமாளின் கழுத்தில் கைகளைப் பதித்து, அவனைத் துன்புறுத்தியது போல் மறு முறையும் சினத்திற்கு ஆளாகி விடலாகாது என்பதில் அவன் கவனமாக இருந்தான் இப்போது. ‘செம்பஞ்சுக் குழம்பு தீட்டிச் சிங்காரித்து ‘இவளை யாருக்காக அலங்கரிக்கிறாய் இப்போது?', என்று தான் அழகன்பெருமாளைக் கேட்ட கேள்விக்கு இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த போது இளையநம்பி பொறுமையின்றித் தவித்தான்.

எதிரே கை விரித்து நிற்பவளின் அபிநயம் போன்ற கோலமும், அவளது நறுமணங்களும், அந்த மாளிகையின் சிங்காரமயமான அலங்காரச் சூழ்நிலையும், வேறு பகுதிகளிலிருந்து மங்கலாக ஒலித்துக்கொண்டு இருந்த நாத கீத வாத்தியங்களின் இனிமையும் அவனைப் பொறுமை இழக்க விடாமல் தடுக்கவும் செய்தன. அந்த நிலையில் மீண்டும் அழகன் பெருமாளே முன் வந்து அவனை வினாவினான்.

“நன்றாகப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் ஐயா! இந்தக் கைகளில் இருப்பதை இன்னும் கூட நீங்கள் புரிந்து கொள்ள முடியவில்லையா?”

“நான்தான் ‘அது என் வேலையல்ல’ என்று அப்பொழுதே சொன்னேனே? பெண்களின் கைகளை அழகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/108&oldid=945350" இலிருந்து மீள்விக்கப்பட்டது