பக்கம்:நித்திலவல்லி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

நித்திலவல்லி / முதல் பாகம்



பிறரை மயக்குவதும், மனத்தை மாற்றுவதும், வசப்படுத்திக் கொள்வதும், ஆண் பிள்ளையின் பிடிவாதங்களை வெல்வதுமே ஒரு கணிகையின் திறமைகளானால், அவை அவளிடமும் இருந்தன.

தன்னை அறியாமலே, தான் அவளிடம் மயங்கியிருப்பதும், மாறியிருப்பதும், வசப்பட்டிருப்பதும், பிடிவாதத்தைத் தோற்றிருப்பதும் மெல்ல மெல்ல அவனுக்கே புரியத் தொடங்கியது. ஒரு கணிகையின் மாளிகையில் ஒருநாள் தங்கியதிலேயே இப்படியாகுமானால், இன்னும் நாட் கணக்கில் இங்கே மறைந்து வசிக்க நேரிடுகையில் என்னென்ன ஆகுமோ என்று தயக்கமாக இருந்தது அவனுக்கு. அன்று பிற்பகல் வரை இளையநம்பி அழகன் பெருமாளுடனோ, குறளனுடனோ கூடப் பேசவில்லை. அவர்களும் அவனிடம் எதையும் கேட்க வரவில்லை. இரத்தினமாலை மட்டும் அவனை அளவுக்கும் அதிகமாகவே விநயமும் விருப்பமும் தெரிய ஓடியாடி உபசரித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய முகமலர்ச்சியையோ, பாராட்டையோ பெறாத ஒருதலைப் பட்சத்துக்குக் கைக்கிளைப் பிரியமாயிருந்தன அந்த உபசாரங்கள். அந்த கைக்கிளைப் பிரியத்தையே இரு பக்கத்து அன்பும் கலக்கும் பிரியமாக மாற்றலாம் என்ற நம்பிக்கை இரத்தினமாலைக்கு இருப்பதாகத் தோன்றியது. அவள் அயராமல் உபசரித்தாள்.

இதே நிலைமையில் சில தினங்கள் கழிந்தன. எவ்வளவு தான் உபசாரங்கள் இருந்தாலும் சிறை வைக்கப்பட்டு விட்டது போல், ஒரு மாளிகையின் உள்ளே இருக்க நேர்ந்தது குறையாகவே தோன்றியது அவனுக்கு.

‘இப்படி முடங்கிக் கிடப்பதற்காகவா திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்தேன்? களப்பிரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் பாண்டிய நாட்டை மீட்டுக் கொள்வதற்குச் செயலாற்ற முடியாமல், யாழிசையையும் அபிநயங்களையும், சந்தன நறுமணத்தையும் அனுபவித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/161&oldid=945297" இலிருந்து மீள்விக்கப்பட்டது