பக்கம்:நித்திலவல்லி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



இந்தச் சமயத்தில் பூத பயங்கரப் படைத் தலைவன் மெல்ல எழுந்திருந்தான். அரச குரு மாவலி முத்தரையர் ஏளனமாக அவனைப் பார்த்தார். கலிய மன்னனோ பூத பயங்கரப் படைத் தலைவன் ஏதோ சொல்லப் போகிறான் என்று அவன் பக்கம் ஆவலோடு திரும்பினான்.

“மாமன்னர் கட்டளையை மேற்கொண்டு பூதபயங்கரப் படையினர் திருமோகூரை முற்றுகையிட்டுச் சோதனை செய்தோம். அங்கும் அந்தப் பாண்டியர் குலத் தலைவன் கிடைக்கவில்லை. அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல்லுதவி செய்யும் பெரிய காராளர் மாளிகைக்குக் கட்டுக்காவல் வைத்துக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறோம்.”

“காராளர் பெரிய உபகாரி! அவர் இந்தக் களப்பிரர் ஆட்சிக்கு மிகவும் உதவி வருகிறவர். அவரைப் போன்றவர்களை நீங்கள் மிகவும் கொடுமைப் படுத்தி விடக் கூடாது.”

“இது பற்றிய தங்களுடைய திருவுள்ளக் குறிப்பை ஏற்கெனவே நன்கு அறிவேன் அரசே!” என்றான் பூத பயங்கரப் படைத் தலைவன்.

“அவிட்ட நாள் விழாவின் போது, இங்கும் திருமோகூரிலும் சிறைப்பட்டவர்களை இங்கே கொண்டு வந்து நிறுத்தினால், அவர்களிடமிருந்து ஏதேனும் தெரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்” என்றார் அரச குரு.

“அதுதான், அவர்களைச் சித்திரவதை செய்து பார்த்தும் கூட எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லையாமே? நீங்கள் மட்டும் எப்படி அந்த உண்மையை வரவழைக்க முடியும்?” என்று அரச குருவைப் பார்த்துக் கேட்டான் கலிய மன்னன்.

“என்னால் ஒரு வேளை அது முடியுமானால் உனக்கும் நல்லதுதானே கலியா? சாம தான பேத தண்ட முறைகளில் கடைசி முறையாகிய தண்ட முறையில் தொடங்கியதால்தான் அவர்கள் பிடிவாதமாக இருந்தார்களோ என்னவோ? மற்ற உபாயங்களைக் கடைப் பிடித்து நான் முயன்று பார்க்கிறேன். என்னால் இப்போது அவர்களிடமிருந்து ஏதேனும் தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/247&oldid=946363" இலிருந்து மீள்விக்கப்பட்டது