பக்கம்:நித்திலவல்லி.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


பேசி விட முடியும் என்றாலும், அவளுடைய இளமை உள்ளம் வாடி விடாமல் பாதுகாக்கக் கருதிய தாய், “நீ நினைப்பது போல் கவலைப்படுவதற்குரிய காரியங்கள் எவையும் நடந்திருக்க முடியாது பெண்ணே ஆலவாய் இறைவனும், இருந்த வளமுடைய பெருமாளும் அவருக்கு ஒரு கெடுதலும் வராமல் உற்ற துணையாயிருப்பார்கள் என்ற நம்பிக்கையும், மனோதிடமும் உனக்கு வேண்டும்” என்று ஆறுதலாக மறுமொழி கூறினாள்.

தந்தையும், தாயும் கூடப் புரிந்து கொள்ள முடியாத குறிப்பான வார்த்தைகளில் கொல்லனிடம் திருக்கானப்பேர் நம்பியின் நலனையும், பிற நிலைமைகளைப் பற்றியும் ஏதாவது விசாரிக்கலாம் என்று செல்வப் பூங்கோதை எண்ணியிருந்தாள். கொல்லனும், தந்தையும் தற்செயலாகப் பேசிக் கொண்டே வெளியேறி விட்டதால், அவள் நினைத்ததைச் செய்ய இயலவில்லை.

“நீங்களும் இங்கே அவரை நினைத்து உருகித் தவிக்கிறீர்கள். அங்கே அவரும் உங்களை நினைத்து உருகித் தவிக்கிறார். இந்தப் பாழாய்ப் போன களப்பிரர் ஆட்சி ஒழிந்ததுமே, உங்கள் இருவருக்கும் நல்லகாலம் விடியும் அம்மா!” என்பதாகச் சென்ற முறை, மதுரையிலிருந்து திரும்பியதும், கொல்லன் கூறியிருந்த ஆறுதலையே இப்போது மீண்டும் நினைத்துக் கொண்டு தாயோடு நீராடி வரப் புறப்பட்டாள் செல்வப் பூங்கோதை. தான் இங்கே எக்காலமும் அவரை நினைத்து உருகித் தவிப்பது போல், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மதுரை மாநகரில் அவர் தன்னை நினைத்துத் தவிப்பாரா என்று எண்ணி எண்ணி மனம் மருகினாள் அவள். அவர் தன்னை எண்ணி உருகுவதாகக் கொல்லன் வந்து கூறியிருந்தாலும், பேதையாகிய தான் தவிக்கும் தவிப்பிற்கும் வீர ஆண்மகனாகிய அவர் தன்னை நினைக்கும் ஞாபகத்திற்கும், நிறைய வேறுபாடு இருக்கும் என்றே செல்வப் பூங்கோதைக்குத் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/349&oldid=946566" இலிருந்து மீள்விக்கப்பட்டது