பக்கம்:நித்திலவல்லி.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



22. களப்பிரர் கபடம்

கொல்லன் திருமருத முன்துறையில் இருந்து மோகூர் திரும்பித் தன் உலைக் களத்தில் சிறது நேரம் தங்கிய பின், விடிவதற்குச் சிறிது நாழிகைக்கு முன்புதான் காராளர் மாளிகைக்குச் சென்றான். அவன் செல்வதற்கு முன்பே, காராளர் பள்ளி எழுந்து கழனிகளைச் சுற்றிப் பார்த்து வருவதற்காக மாளிகையிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார். கொல்லனைக் கண்டதும், “நேற்றைக்கு நள்ளிரவே பூத பயங்கரப் படை அறவே மோகூரிலிருந்து திரும்பிச் சென்று விட்டது. இனி நமக்கு எந்தக் கவலையும் இல்லை! எனக்கும் என் மாளிகையைச் சேர்ந்தவர்களுக்கும், இந்தச் சில நாட்களில் பூத பயங்கரப் படையினரால் நேர்ந்த பரிசோதனைகளையும், காவல்களையும் மறந்து எப்போதும் போல் அரண்மனையோடும் நல்லுறவும், நட்பும் கொண்டிருக்க வேண்டும்-என்று அரண்மனையிலிருந்து எனக்குச் சொல்லி அனுப்பி விட்டார்கள்!” என்று காராளர் அவனிடம் கூறினார். இதைக் கேட்டவுடனே கொல்லன் எவ்வளவு உற்சாகத்தை அடைவான் என்று காராளர் எதிர்பார்த்திருந்தாரோ, அவ்வளவு உற்சாகத்தை அவன் அடையவில்லை. அவர் கூறியதற்கு, அவனுடைய பதில் உணர்வு என்ன என்பதே அவருக்குப் புரியவில்லை. அது அவருக்கு வியப்பை அளித்தது. மேலும் வெளிப்படையாக வலிந்து அவனிடம் அவரே கேட்டார்:

“இது பற்றி நீ என்ன நினைக்கிறாய்? திருமோகூரைப் பற்றியும், என்னைப் பற்றியும் களப்பிரர்களுக்கு ஏற்பட் டிருந்த சந்தேகங்கள் தீர்ந்து விட்டன என்று எனக்குத் தோன்றுகிறது..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/350&oldid=946567" இலிருந்து மீள்விக்கப்பட்டது