பக்கம்:நித்திலவல்லி.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

375


அப்போது இயல்பை மீறிய அமைதியில் ஆழ்ந்திருந்தது. மனிதர்கள் அதிகம் பழகாத இயற்கை வளமே உள்ள இடத்தினது அழகின் அமைதியாக அது இல்லை. இந்த அமைதி வேறுபாடு உடையதாகவும் சந்தேகத்துக்கு உரியதாகவும் இருந்தது. காரி, குறளன், கழற்சிங்கன் முதலியவர்களும் கூட இந்த அமைதியைப் பற்றி ஐயப்பாடு கொண்டனர். அழகன் பெருமாளுக்கு இன்னதென்று காரணம் புரியாமலே, மனத்தில் ஏதோ இடறியது. பேசாமல், கொள்ளாமல் வந்த வழியே திரும்பி நிலவறையில் இறங்கி உள்ளேயே போய்விடலாமா என்று கூடத் தோன்றியது. அடர்த்தியான அந்த நந்தவனத்தில் எங்கே போய், எப்படி வெளியேறி, எவ்வாறு தப்புவது என்றும் அவர்களுக்கு உடனே விளங்கவில்லை. ஒரே குழப்பமாயிருந்தது.

அப்போதுதான் எதிர்பாராதபடி அந்த அபாயம் நடந்தது. அவர்கள் முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று நாற்புறமும் புதர்களிலிருந்து நூற்றுக்கணக்கான பூத பயங்கரப் படை வீரர்கள் வெளிப்பட்டு ஆயுதபாணிகளாகப் பாய்ந்தனர். அழகன் பெருமாள் முதலியவர்கள் எப்படித் தப்புவது, என்ன செய்து தப்புவது என்று விழிப்படையும் முன்பாகவே மீண்டும் சிறைப் பிடிக்கப்பட்டு விட்டனர். கண்மூடித் திறப்பதற்குள் இது நடந்து முடிந்து விட்டது. யாரும் எங்கும் ஒடித் தப்ப வழியில்லை.

அந்தப் பரபரப்பான சூழ்நிலையிலும், சிறைப்பட்டு விட்ட தங்களுடைய எண்ணிக்கையில் ஒன்று குறைவதை அழகன் பெருமாள் தெளிவாக உணர்ந்தான். உருவத்தில் மிகவும் சிறியவனாகிய குறளன் மட்டும் மின்னல் வேகத்தில் தப்பியிருந்தான். அந்த வினாடியில் பூத பயங்கரப் படையினரும் அதைக் கவனிக்கவில்லை என்று தெரிந்தது. தங்களில் ஒருவர் தப்ப முடிந்ததனால் தொடர்புள்ள மற்றவர்களுக்கு வெளியே போய், நடந்ததை அறிவிக்க முடியும் என்பதையும், மீட்பதற்கு ஏற்பாடு செய்ய முடியும் என்பதையும் எண்ணி மகிழ்ந்தான் அழகன் பெருமாள். அப்போது மற்றும் நால்வர் வேறொரு புதரிலிருந்து வெளிப்பட்டனர். பூத பயங்கரப் படைத் தலைவனும் மாவலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/374&oldid=946591" இலிருந்து மீள்விக்கப்பட்டது