பக்கம்:நித்திலவல்லி.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


மேற்கே சேர நாட்டிற்கும் நீர் போய் வர வேண்டும் என்று இரண்டு இடங்களைக் குறிப்பிட்டு நான் கூறிய போதே, அதிலுள்ள குறிப்பை நீர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். களப்பிர அரசனிடம் சொல்லி அவன் இசைவுடன் நீர் யாத்திரையைத் தொடங்க வேண்டும் என்று நான் கூறியதிலுள்ள அரச தந்திரமும் சாதுரியமும் கூட உங்களுக்கு இதற்குள் விளங்கியிருக்க வேண்டும்.”

“இப்போது நன்றாக விளங்குகிறது ஐயா! திவ்ய தேச யாத்திரை என்று கூறிக் கொள்வதாலும், களப்பிரக் கலியரசனிடமே சொல்லி விடை பெற்று யாத்திரையைத் தொடங்குவதாலும், ஐயப்ப்ாடுகளிலிருந்து என்னை நான் தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால் மெய்யாகவே பல்லவர் நாட்டிலும், சேர நாட்டிலும் தங்களுக்காக அடியேன் என்னென்ன காரியங்களைச் சாதித்துக் கொண்டு வர வேண்டும் என்பதைத் தாங்கள் இனிமேல்தான் கூறப் போகிறீர்கள் என்று எண்ணுகிறேன்!”

“உங்கள் எண்ணம் தவறானதில்லை காராளரே! சேர வேந்தனுக்கும், பல்லவ மன்னனுக்கும் முத்திரையிட்டு, நம் இலச்சினை பொறித்த இரு இரகசிய ஒலைகளைத் தனித் தனியே நான் உங்களிடம் இப்போது தரப் போகிறேன். அந்த ஒலைகளை அவர்களிடம் சேர்ப்பதுடன், என் கருத்தை அந்த இரு பெருமன்னர்களுக்கும் விளக்கிக் கூறி, நான் ஒலை மூலம் அவர்களிடம் கோரியிருக்கும் உதவிகளைப் புரிய முன் வருமாறு செய்ய வேண்டும். இப்போதுள்ள நிலைமையில் உங்களைத் தவிர, வேறு யார் இங்கிருந்து இப்படித் திவ்ய தேச யாத்திரை புறப்பட்டாலும், களப்பிரர்கள் அவர்கள் மேல் சந்தேகப்படுவார்கள், பின் தொடர்வார்கள், தடுப்பார்கள். ஆனால், நீங்கள் புறப்படுவதை, அதுவும் தன்னிடமே வந்து, ஆசி பெற்றுப் புறப்படுவதைக் களப்பிரக் கலியரசன் தடுக்க மாட்டான். ஆனாலும் அதிலும் ஓர் அபாயம் இருக்கிறது காராளரே! அரசன் சந்தேகப் படாவிட்டாலும், அவனோடு நிழல் போல இணை பிரியாமல் இருக்கிற மாவலி முத்தரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/386&oldid=946603" இலிருந்து மீள்விக்கப்பட்டது