பக்கம்:நித்திலவல்லி.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

423


முயன்றான். எவ்வளவோ முயன்றும், அவனால் புரிந்து கொள்ள முடியாதவைக இருந்தன. அவை. அதே சமயம் பாண்டிய மரபை ஒளி பெறச் செய்வதற்காகத் தம் வாழ்வையே தத்தம் செய்து கொடுத்திருக்கும், பெரியவரின் வேண்டுகோள் என்னவாக இருந்தாலும், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை தனக்கு இருப்பதையும் அவன் உணர்ந்தான்.

“தேவரீர் திருவடித் தாமரைகளில், அடியேன் இளைய நம்பி தெண்டனிட்டு வணங்கி வரையும் ஒலை. சூரிய சந்திரர்கள் சாட்சியமாகப் பாண்டிய நாட்டின் எதிர்கால நலனை முன்னிட்டுத் தாங்கள் கேட்கும் இரண்டு வாக்குறுதிகளை, மறுக்காமலும், மறக்காமலும் நிறைவேற்றுவதாக ஆலவாய் அண்ணல் மேலும், இருந்த வளமுடையார் மேலும் ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன். தாங்கள் எழுதியுள்ள குறிப்புகளின்படியே, எல்லாச் செயல்களையும் செய்வேன். தங்கள் நல்லாசியுடன் வந்த மீனக் கொடியையும், இடை வாளையும் வணங்கிப் பெற்றுக் கொண்டேன். ஒளி திகழும் தங்கள் திருமுக மண்டலத்தைத் தரிசனம் செய்யும் நாளை ஆவலோடு எதிர் நோக்கியுள்ளேன்” என்று ஒலையை எழுதி முடித்து, வந்திருந்த தூதுவனிடம் கொடுத்தான் இளையநம்பி. தூதன் திரும்பிய பின், கொடியையும், வாளையும் இரத்தினமாலையிடம் கொடுத்து, “மீண்டும் நான் கேட்கிற வரை இவற்றைப் பாதுகாப்பாக வைத்திரு” என்றான். இரத்தினமாலை அவற்றை வாங்கிச் சென்று, உள்ளே வைத்து விட்டுத் திரும்பி வந்தாள்.

“ஐயா! தாங்கள் வேறுபாடாக நினைக்கவில்லை என்றால், பெரியவர் இன்று இங்கே அனுப்பிய ஒலையில், தங்களுக்கு என்ன எழுதியிருந்தார் என்பதை இந்தப் பேதையும் அறிய ஆசைப்படுகிறேன்” என்றாள் அவள்.

அந்த ஒலையை அவள் படித்தறிவதில் தவறில்லை என்று கருதிய இளையநம்பி, “நீயே படித்துப் பார் இரத்தினமாலை!" என்று அவளிடமே அதை எடுத்துக் கொடுத்து விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/421&oldid=946639" இலிருந்து மீள்விக்கப்பட்டது