பக்கம்:நித்திலவல்லி.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

481


ஆபத்துதவிகளும், முனையெதிர் மோகர் படையினரும் செய்த மகிழ்ச்சி ஆரவாரம் பொங்க, மதுரை மாநகரின் பழம்பெரும் கோட்டையிலே மீண்டும் பாண்டியர் மீன் கொடி ஏறியது. இருள் நீங்கிப் பொழுதும் புலர்ந்தது. கொடியுடன், பெரியவர் கொடுத்தனுப்பியிருந்த இடை வாளை அணிந்து ஆலவாய் இறையனார் கோயிலுக்கும், இருந்த வளமுடையார் கோயிலுக்கும் சென்று வணங்கிய பின், மங்கல வேளையில் அரண்மனையிற் பிரவேசம் செய்தான் இளையநம்பி.

மதுரை மாநகரத்து அரண்மனையின் கீழ்த்திசையில் கோட்டை மதில்களிலே தெரியும் காலைக் கதிரவனின் ஒளியைக் கண்ட போது, முதன் முதலாகத் தான் பெரியவர் மதுராபதி வித்தகரைத் திருமோகூரில் சந்தித்த போது, 'பாண்டிய நாட்டில் இருட்டிப் போய் நெடுங்காலமாயிற்று' என்று அவர் கூறியதற்கு மறுமொழியாக, ‘ஒவ்வோர் இருட்டுக்குப் பின்னும் ஒரு வைகறை உண்டு ஐயா!' என்று நம்பிக்கையோடு அவருக்கு மறு மொழி கூறியிருந்தது, இன்று இப்படி நிதரிசனமாகி இருப்பதை உணர்ந்தான்.

அரண்மனைக்குள்ளோ, கொலுமண்டபத்திலோ அதிக நேரம் தங்காமல் ‘கொடி ஏறிப் பறக்கத் தொடங்கிய சில நாழிகை நேரத்திற் கிழக்குக் கோட்டை வாயில் வழியாக நானே நகருக்குள் வருவேன்' என்று பெரியவர் தெரிவித்திருந்ததை ஞாபகப்படுத்திக் கொண்டு காராளரும் பரிவாரமும் புடைசூழக் கிழக்குக் கோட்டைவாயிலுக்கு விரைந்தான் இளையநம்பி. பாண்டியப் பேரரசு மீண்டும் உதயமாகக் காரணமான பெரியவரை, வரவேற்பதைத் தன் முதற்கடமையாக அவன் கருதினான்.

கோநகரக் குடிமக்கள் இந்த மாபெரும் வெற்றிக்காகக் காத்திருந்தவர்களைப் போல், தெரு எங்கும் தோரணங்கள் கட்டி, வாழை மரங்கள் நட்டுக் கோலமிட்டு அலங்கரித் திருந்தனர். கோநகரும், சுற்றுப்புறங்களும் விழாக்கோலம் பூண்டிருந்தன. மங்கல வாத்தியங்களும், வெற்றி முரசங்களும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/479&oldid=946709" இலிருந்து மீள்விக்கப்பட்டது