பக்கம்:நித்திலவல்லி.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

482

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


வாழ்த்தொலிகளும் எல்லாத் திசைகளிலும் எழுந்து, பேராரவாரமாக ஒலித்துக் கொண்டிருந்தன. இளையநம்பி கிழக்குக்கோட்டை வாயிலுக்குப் போய்ச் சேருவதற்கு முன்பே, அங்கே ஆயிரம் வெண் புரவிகளில் அணி வகுத்த வீரர்களோடு புறப்பட்டுக் கொற்கையிலிருந்து வந்து காத்திருந்தான் குதிரைக் கோட்டத்து மருதன் இளநாக நிகமத்தான். முக படாம் தரித்த யானையின் மேல் அந்துவன் எடுப்பாக அமர்ந்திருந்தான். இளையநம்பியைக் கண்டதும் யானைப்பாகன் அந்துவன், “அரசே! இந்த ஏழையின் முகராசிக்குக் கெட்ட பெயர் வராமல் காப்பாற்றியதற்காகத் தங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவதென்றே தெரியவில்லை. ‘இந்த நகரத்தில் முதலில் என் முகத்தில் விழிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் வந்த காரியம் நிச்சயமாக வெற்றி பெறும்’ என்று பல திங்கள் காலத்துக்கு முன் உங்களிடம் சொல்லியதை இப்போது நிறைவேற்றி விட்டேன்" என்றான். அவனுடைய கள்ளங் கபடமற்ற பாராட்டை ஏற்றுப் புன்முறுவல் பூத்தான் இளையநம்பி.

பூர்ண கும்பத்துடனும், மங்கல தீபத்துடனும் பெரியவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கும் நோக்குடனும், அங்கே தன் பணிப்பெண்களோடு காத்திருந்தாள் கணிகை இரத்தினமாலை. கிழக்குக் கோட்டை வாயிலிலிருந்து அரண்மனை வரை அழைத்துச் செல்வதற்காக இரத்தினமாலையின் முத்துப்பல்லக்கும் காத்திருந்தது. அழகிய பெண்கள் இருமருங்கும் வெண்சாமரம் வீசக் காத்திருந்தனர். வழிநெடுக மலர்களைத் தூவியிருந்தார்கள். மங்கலப் பொருள்களைச் சிதறியிருந்தார்கள்.

பாண்டியன் இளையநம்பி, நகருக்குள் பிரவேசிக்கப் போகும் அந்த மாபெரும் அரச தந்திரிக்கு மாலை சூட்டி வரவேற்பதற்காகவே காராளரோடும், அழகன்பெருமாளோடும் பரிவாரங்களோடும் காத்திருந்தான். நெடுநேரம் காத்திருந்த பின், கீழ்த்திசையில் மற்றொரு சூரியன் புதிதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/480&oldid=946710" இலிருந்து மீள்விக்கப்பட்டது