பக்கம்:நித்திலவல்லி.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

483


உதித்து வந்தது போல், ஒளி திகழும் அந்தப் பேருருவம் ஆபத்துதவிகள் சூழ வந்து தோன்றியதும், கடல் அலை போல் கூட்டத்தில் பேராரவாரம் எழுந்தது. வாழ்த்தொலி விண்ணை எட்டியது. மதிற்சுவர்களின் மேலிருந்தும், கோட்டைக் கதவுகளிலிருந்தும், மரங்களின் மேலிருந்தும், அந்த ஒளிமயமான பேருருவத்தின் மேல் மலர்மாரி பொழிந்தது. இன்றுதான் வாழ்விலேயே ஒரு புதிய மாறுதலாக உணர்வுகளே தெரிய விடாத அந்த முக மண்டலத்தில் வெளிப்படையாகப் புன்முறுவலைப் பார்த்தான் இளையநம்பி. இரத்தினமாலை நிறைகுடமும், மங்கல தீபமும் காண்பித்து ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றாள். முழந்தாள் மண்ணில் பதிய மண்டியிட்டு வணங்கிய பாண்டியன் இளையநம்பியைத் தூக்கி நிறுத்தி, நெஞ்சாரத் தழுவிக் கொண்டார் பெரியவர் மதுராபதி வித்தகர். நாத்தழுதழுக்க இளையநம்பி அவரிடம் கூறலானான்:-

“ஐயா! இந்தப் பேரரசை நீங்கள்தான் மீட்டுத் தந்திருக்கிறீர்கள்! நான் வெறும் கருவிதான். ஆயுதங்களும் வீரர்களும் வென்ற வெற்றி என்பதை விட இதைத் தங்கள் சாதுரியத்தின் அரச தந்திர வெற்றி என்றே கூறலாம்.”

“இந்த வெற்றியில் என் சாதுரியம் மட்டுமில்லை! இதோ இவர்களுக்கு எல்லாம் அதில் பங்கு இருக்கிறது” என்று தம்மைச் சூழ இருந்த காராளர், கொல்லன், அழகன் பெருமாள், இரத்தினமாலை, யானைப்பாகன் அந்துவன், ஆபத்துதவிகள், உப வனத்து ஊழியர்கள், மருதன் இளநாக நிகமத்தான் எல்லாரையும் சுட்டிக் காண்பித்தார் பெரியவர். அப்போது அவருக்குப் பின்புறம் நின்ற ஆபத்துதவி ஒருவன், முன்னால் வந்து அதுவரை தன் கையிற் சுமந்து கொண்டிருந்த ஒரு பேழையை அவரிடம் கொடுத்தான்.

“இளையநம்பீ! நெடுங்காலத்துக்கு முன் இந்நாட்டைக் களப்பிரர்களிடம் தோற்ற போது இங்கே மதுரை மாநகரத்து அரண்மனையிலிருந்து இரவோடிரவாக நிலவறை வழியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/481&oldid=946711" இலிருந்து மீள்விக்கப்பட்டது