பக்கம்:நித்திலவல்லி.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

491



நட்புள்ள எல்லைப்புற நாடுகள் இருந்தால், உன்னால் துணிவாக எதையும் சாதிக்க முடியும்!”

“தங்களது இந்த இரண்டாவது வாக்குறுதியையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் ஐயா!”

“பொறு! இப்படி அவசரப்பட்டு ஒப்புக் கொள்வதை விட இந்த இரண்டாவது வாக்குறுதியை ஒரளவு நிதானமாகச் சிந்தித்த பின், ஒப்புக் கொள்வதே உனக்கு நல்லது!”

“சிந்திக்கவோ, தயங்கவோ இதில் எதுவும் இல்லை ஐயா! எனக்கும் நாட்டுக்கும் நன்மை தராத எதையுமே, தாங்கள் ஒரு போதும் கூற மாட்டீர்கள்...”

“இதில் ஒரு வேளை உன் நன்மை பாதிக்கப்பட்டாலும், நாட்டின் நன்மையைப் பாதிக்க விட மாட்டேன் நான்”

என்று அவன் கூறிய வாக்கியத்தையே சிறிது திருத்தி, அர்த்தம் நிறையச் சிரித்த படியே மீண்டும் திருப்பிச் சொன்னார் அவர். அதை ஏன் அவர் அப்படித் திருப்பிச் சொல்கிறார் என்பது அவனுக்கு விளங்கவில்லையாயினும், சேரனின் சார்பில் நிறைவேற்றியாக வேண்டிய மூன்றாவது வாக்குறுதியைக் கூறுமாறு அவன் அவரை வேண்டினான்:-

எதற்காகவோ அவர் மீண்டும் தயங்கினார். அவனைக் கூர்ந்து பார்த்தார். பின்பு மெல்ல அதைச் சொல்லத் தொடங்கினார்:

“போரில் நமக்கு உதவியதற்கு ஒர் அடையாளப் பிரதியுபகாரமாகச் சேரமன்னனின் மகளைப் பாண்டிய நாட்டு வெற்றிக்குப் பின் முடி சூடும் முதற் பாண்டியனின் பட்டத்தரசியாக ஏற்க வேண்டும் என்பதுதான் மூன்றாவது வேண்டுகோள்! இப்போதுள்ள சூழ்நிலையில் பாண்டிய நாட்டின் எல்லைப்புற அரசன் ஒருவனிடம், பெண் கொண்டு மணந்து உறவை வளர்ப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு மிக மிக இன்றியமையாதது ஆகும்” இதைக் கேட்டு இளைய நம்பியின் முகம் போன போக்கைப் பார்த்து அவர் பேச்சைப் பாதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/489&oldid=946719" இலிருந்து மீள்விக்கப்பட்டது