பக்கம்:நித்திலவல்லி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

59



வைத்துவிட்டார். இதேபோல் அவர் பத்துப் பேருடைய அழுகையையும் ஒரே முகத்தில் வைத்துப் படைத்த குரூரமான முகமும் உலகில் எங்காவது இருக்கும். உன்னால் படைப்புக் கடவுளுக்குக் கை நஷ்டமாகிப் போன அந்த ஒன்பது பேருடைய சிரிப்பையும், நிரந்து கொள்வதற்காக உன் முகத்துக்கு நேர்மாறான குரூர முகம் ஒன்றையும் அவர் படைத்துத்தான் இருக்கவேண்டும்’ என்று பெரியவர் ஒரு சமயம் என்னிடம் கூறியபோது, உடனே சிறிதும் தயங்காமல் நான் என்ன மறுமொழி கூறினேன் தெரியுமா?”

“அவரிடம் என்ன கூறியிருந்தாய் நீ அப்போது?”

“நான் அவரிடம், ‘தாங்கள் கூறுவது மெய்தான் ஐயா! இப்போது நம்முடைய பாண்டிய நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டுவரும் களப்பிரக் கலியரசன் முகத்தில், பத்து முகங்களுக்குப் பகிர்ந்து அளிக்கத் தேவையான அவ்வளவு குரூரத்தையும், அழுகையையும் கைதவறிப் படைப்புக் கடவுள் வைத்திருப்பதாகத் தெரிகிறது’ என்று உடனே கூறிய மறுமொழியைக் கேட்டு நீண்டநேரம் சிரித்துக் கொண்டிருந்தார் பெரியவர்” என்றான் யானைப்பாகனாகிய அந்துவன்.

சிறிதும் பெரிதுமாகச் சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருந்த யானைகளைக் கடந்து, இளையநம்பியைக் கொட்டாரத்தின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்றான் அந்துவன். அவனோடு ஓர் அரை நாழிகை நேரம் பேசிச் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

“இரவில் இங்கே தங்குவதை விட, நீங்கள் வெள்ளியம்பல மண்டபத்துக்குப் போய்விடுவது நல்லது. இந்தக் கொட்டாரத்தில் சில களப்பிர யானைப் பாகர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வளவாக விரும்பத் தக்கவர்கள் இல்லை; மேலும் இன்றிரவு வெள்ளியம்பல மண்டபத்தின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உங்களை இன்னொரு நண்பன் சந்திப்பான். அவனிடம் இருந்து நீங்கள் மிக அரிய செய்திகள் சிலவற்றையும், செயல் திட்டங்களையும் தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/60&oldid=945247" இலிருந்து மீள்விக்கப்பட்டது