பக்கம்:நித்திலவல்லி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

நித்திலவல்லி / முதல் பாகம்



“மறந்து விடவில்லை! என்றாலும் அஞ்ஞாத வாசமே நம்முடைய முடிவான குறிக்கோளும், பயனுமில்லை. எதிரிகள் நம் கண் காண வளர்ந்து வருகிறார்கள்; உயர்ந்து வருகிறார்கள்.”

“நம்முடைய எதிரிகள் வளர்வதும் உயர்வதும் கூட நல்லதுதான். ஏனென்றால், அவர்கள் தோல்வியடைந்து கீழே விழும் போது, குறைந்த உயரத்திலிருந்து விழக் கூடாது. இறுதியில் தோற்றுக் கீழே விழும் போது, நிர்மூலமாகி விடுகிற அளவு பெரிய உயரத்திலிருந்து விழுவதற்கு ஏற்ற அத்துணை உயரத்திற்கு அவர்களை விட்டு விடுவதும் அரச தந்திரங்களில் ஒன்றுதான். அடிப்படை இல்லாத வளர்ச்சிகளையும், உயரங்களையும், அவை தாமாகவே விழுகிறவரை காத்திருந்து, பார்ப்பதற்கு நமக்குத்தான் ஓரளவு பொறுமை வேண்டும். ‘இந்த உயரத்திற்கு அடிப்படை இல்லை போலிருக்கிறதே'- என்று நம் எதிரிகளே புரிந்து கொண்டு அடிப்படையை பலப்படுத்தித் திருத்திக் கொள்ள முடிகிறாற் போல், அது குறைவான உயரத்தில் இருக்கும் போது நாம் குறுக்கிட்டு அவர்களை எதிர்த்து விடக் கூடாது.”

“மிகவும் பல்லாண்டுக் காலமாக அடிமைப்பட்டு விட்டோம் நாம். பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு...”

“நியாயம்தான். அதை நம்மை விட நம்முடைய வழி காட்டியான பெரியவர் மதுராபதி வித்தகர் நன்றாக உணர்ந்திருக்கிறார். அவரே அடக்கமாகவும், பொறுமையாகவும் இருப்பதிலிருந்துதான் இப்படியும் ஒரு தந்திரம் இருக்கிறது என்பதையே நான் உணர முடிந்தது. காலம் கணிகிறவரை நமது விருப்புக்களை விட வெறுப்புக்களைத்தான் அதிகம் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.”

இப்படி இளையநம்பி கூறிய விளக்கம் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்ததன் காரணமாக அவர்களும் மன அமைதி அடைந்தனர். அதன் பின் மூன்று நான்கு நாழிகை வரை, தான் அறியவேண்டிய பல செய்திகளை அவர்களிடமிருந்து விளக்கமாகவும் முழுமையாகவும் அறிந்து கொண்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/95&oldid=945259" இலிருந்து மீள்விக்கப்பட்டது