பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV முசிறியில்-கழக உயர்நிலைப் பள்ளி வாழ்வில் குமிழி-25 25. உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன் 1934 சூன் திங்கள் ஒரு தன்னாளில் வி. கே. அரங்க நாதஅய்யர் கணபதியையும் என்னையும் முசிறிக்கு இட்டுச் சென்றார். எங்களை நான்காம் படிவத்தில் (பழைய ஒன்பதாம் வகுப்பு) சேர்த்து விட்டார். சென்ற ஆண்டு தடங்கல் சொல்லி எங்களைச் சேர்க்காது அனுப்பிவிட்ட கே. இராமசந்திர அய்யர் இந்த ஆண்டு மகிழ்ச்சியுடன் சேர்த்துக் கொண்டார். இப்போதும் தலைமையாசிரியராக இருந்தவர் எஸ் அரங்கசாமி அய்யங்கார்தான். இவரை *செல்லய்யா' என்றே அனைவரும் சொல்வார்கள். அதுவும் மாணாக்கர் விடுதியில்தான் சேர வேண்டும் என்று சொன்ன போது இரட்டை மகிழ்ச்சியுடன் விடுதியிலும் சேர்த்துக் கொண்டார். நாங்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது பள்ளி புதிதாகக் கட்டப்பெற்ற கட்டத்திற்கு வந்து விட்டது. உம்பர் உலகிற்கு வந்து விட்டது போன்ற ஒரு நல்லுணர்ச்சி எங்களை ஆட்கொண்டது. நல்ல முறையில், நன்கு உழைத்துப் படிக்க வேண்டும் என்ற முடிவு கொண்டோம். துறையூர்ப் பள்ளியில் எட்டு மாதம் பெற்ற அடிப்படைக் கல்வி புதிய சூழ்நிலையில் கைகொடுத்து உதவியது.