பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 நினைவுக் குமிழிகள்-1 இங்கு ரவா தோசை பெயர் போனது. 9 மணிவரை பசி தாங்க முடியாத ஒருசில மாணாக்கர்கள் இங்குத் தோசையும் காஃபியும் கொண்டு விடுவார்கள். இவர்கள் 9 மணிக்குச் சரி யாக உணவு கொள்ள முடிகின்றதில்லை. என்ன அறிவுரை சொன்னாலும் ஒரு சில மேற்படிவ மாணாக்கர்கள் காலை யில் ஒட்டல் பழக்கத்தைக் கைவிடுவதில்லை. நாள்தோறும் அதிகாலையில் காவிரி சென்று நீராடி வரவேண்டும்; ஏழு மணிக்குள் திரும்பி விடுதல் வேண்டும். வெள்ளம் பெருகி வரும் காலத்தில் உணவு விடுதிக்கு நேர் தெற்கே ஆற்றில் கட்டப்பெற்றுள்ள வாகணைக்குக் கீழ்ப்புறம் நீர்ப்பிரவாகம் இன்றி தண்ணிர்குளம்போல் அதிக ஒட்டமின்றி இருக்கும். இராமேசுவரத்தில் கட லலைகள் இல்லாத அக்கினி தீர்த்தம் போல் இருந்தது என்று சொல்லி வைக்கலாம். இந்த இடத்தில் தான் அனை வரும் நீராட வேண்டும் என்பது கட்டாய ஏற்பாடு; வேறு இடங்களுக்குப் போகக் கூடாது என்பது நிரந்தரமான கட்டளை. பெரும்பாலோர் நாட்டுப்புறத்திலிருந்து வந்த வர்களாதலின் அனைவருக்கும் நீந்தத் தெரியும். வெள்ளக் காலத்தில் வாகணையும் அருகில் நீரின் ஆழம் ஆறு ஏழு அடி வரையிலும் இருக்கும். கரையருகில் சாய்ந்த நிலையி லுள்ள மரங்கள் தண்ணிருக்கு அருகிலும் தண்ணிரைத் தொட்டுக் கொண்டுமிருக்கும். நீந்தத் தெரிந்தவர்கள் துணிவாக இந்த மரங்களிலேறி நீரில் குதித்து விளையாடுவது கண்ணன் யமுனையில் நீராடுவதை நினைவூட்டுவதாக இருக்கும். பிற்காலத்தில் நான் சங்க இலக்கியங்களில் ஆழங்கால் பட்டபோது மருதத்தினைப் பாடல்களைப் படித் தநுபவிக்கும்போது இந்த ஆற்றங்கரைச் சூழ்நிலை நினை வுக்கு வரும்.