பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-36 36. கல்லூரியில் பயிலும் போது என் பழக்கங்கள் இப்பொழுது உயர்நிலைப் பள்ளிகளில் மாணாக்கர்கள் வகுப்பிற்குச் செல்லும்போது குறிப்பேடுகளையும் பாடநூல் களையும் சுமந்து செல்வதைக் காணும்போது என் மனம் மிகவும் இரக்கப்படுகின்றது. இசைக்கல்லூரியில் வீணை, சீறியாழ், (Fiddle) தவுல், மத்தளம் பயிலும் மாணாக்கர்கள் கூட நாடோறும் இம்மாதிரித் தங்கள் இசைக் கருவிகளைச் சுமந்து செல்லும் தண்டனையைப் பெறவில்லை. சிறார் களும் சிறுமிகளும் காக்கி நிறப் பைகளைக் குறிப்பேடுகளாலும் பாடநூல்களாலும் நிரப்பித் தம் முதுகில் சுமந்து கொண்டு செல்வதைப் பார்த்தால் இமய மலை உச்சியைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் செல்லும் பயணிகளை நினைக்க வைக்கின்றது. சென்னையில் நகர்ப்பேருந்துகளில் தம் மூட்டைகளுடன் இவர்கள் ஏறும்பொழுதும், இருக்கைகளில் அமரும்பொழுதும் இவர்கள் படும் சிரமத்தைச் சொல்லி முடியாது. இவர்களால் ஏனைய பயணிகள் படும் சிரமம் பொறுக்க முடியாது. இந்த மாணாக்கர்கள் பேருந்துகளில் நிற்கும் நிலை ஏற்பட்டால் சிரமத்தின் அளவைச் சொல்ல முடியாது; அவர்கள் உடற்பாரத்துடன் முதுகிலுள்ள மூட்டை பாரமும் கொண்டு இப்படியும் அப்படியும் திரும்பும் போது அவர்கள் படும் சிரமத்தை கருவுயிர்க்கும் பெண்படும் வேதனையுடன்தான் ஒப்பிட்டுப் பேசவேண்டும். +1, +2 வகுப்புகளில் படிக்கும் மாணாக்க மாணாக்கியர்களின் நிலை இன்னும் மோசமாகின்றது. இவர்கள்படும் தொல்லைகளைக் காணும் பொழுதெல்லாம் இவர்கள்பால் மிகவும் கழிவிரக்கம் கொள்ளுகின்றேன். இவற்றை நோக்கும்போது நான் பயின்ற நாளை நினைத்துப் பார்க்கின்றேன். ஆங்கிலம், தமிழ் வகுப்புகளில்