பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 நினைவுக் குமிழிகள்-1 இவற்றிற்கெல்லாம் காரணம் பொறாமைதான்; என் உழைப்பைக் கண்டும், காலாண்டு அரையாண்டுத் தேர்வு களில் 70, 80 என்று பெறும் மதிப்பெண்களைக் கண்டும் பொறாமைப் படுவார்கள். நான் அறையைக் சாலி செய்து கொண்டு வேறிடம் செல்வதெனத் தீர்மானித்து விட்டேன். நந்திகோவில் தெருவில் உள்ள மலபார் விடுதியில் முன்பணம் தந்து ஓர் அறையை ஒதுக்கிக்கொண்டேன். இது கல்லூரிக்கும் பக்கம். சிற்றுண்டி கொள்வதற்கு பெனின்சுலர் சிற்றுண்டி விடுதியும் அருகிலிருந்தது. ஆதிகுடி வேங்கட்டராம அய்யர் உணவு விடுதிக்குப்போவதை நிறுத்திக்கொண்டு அருகிலுள்ள சில சைவர்களின் விடுதிகளெல்லாம் முயன்று பார்த்தேன். எந்த விடுதி உணவும் என் சுவைக்கும் உடலுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. ஆறு மாதம் எப்படியோ காலந் தள்ளினேன். காசியப்பா ராவுத்தர் ஸ்டோரில் தங்கியிருந்தபோது பெரிய கடை வீதியிலுள்ள ஒரு சிற்றுண்டி விடுதியில் மாலை மூன்று அல்லது நாலு மணிக்கு வழக்கமாகச் சிற்றுண்டி, கோகோ அல்லது ஒவல்டின் பானம் கொள்வேன். பெரும் பாலும் காஃபி அருந்துவதில்லை. நந்திகோயில் தெருவிற்கு வந்தபிறகு உணவுக்கும் சிற்றுண்டிக்கும் செல்லும் நடை குறைந்தது. நாளடைவில் உணவும் சரிப்பட்டு விட்டது. மிக நன்றாகப் படித்ததால் முதல் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றேன். கணிதம், வேதியியல், இயற்பியல், தமிழ் இவற்றில் 75 விழுக்காடுக்குமேல் பெற்றேன். கணிதத்தில் ஒரு தாளில் (பேராசிரியர் சீநிவாசன் கற்பித்த பகுதி) 100க்கு 100 பெற்றேன். 3 மணி நேர வினாத்தாளை 2; மணிக்கே முடிக்கவும் முடிந்தது.