பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4

நினைவுக் குமிழிகள்-I

போகாது தடுத்து விடும். மாரியம்மனையும் நீர் சூழ்ந்து விடும். நீர்க்கடவுளல்லவா? வைக்கோல் போர்கட்கும் இதே நிலைதான். ஏரியிலிருந்து வழிந்து பெருகிச் செல்லும் நீர் ஊருக்கு மேற்கில் ஒரு ஃபர்லாங் தொலைவிலுள்ள சின்ன ஏரிக்குச் செல்லும். இவ்வாறு வழிந்து செல்லும் நிலையில் இடுப்பளவுக்கு மேலும் நீர் செல்வதால் ஒன்றிரண்டு நாட்களுக்கு ஊருக்கு மேல் திசையிலுள்ள ஊர்கட்கும் இந்த ஊருக்கும் தொடர்பு அறுந்துவிடும். சின்ன ஏரிக்கு அதிகப் பாசனம் இல்லை. இதிலிருந்து வழியும் நீர் மேல் திசையில் சென்று ஊருக்குப் புறம்பே சுமார் இரண்டு கல் தொலைவில் செல்லும் ஒரு காட்டாற்றில் கலந்துவிடும். ஏரிக்கு மேற்கில் ஏரிக்கரையருகில் ஒரு சிறிய திருமால் ஆலயம் உள்ளது. இங்குக் கோயில் என்ற ஒரு தனிச் சிறப்பான அமைப்பு இல்லை. கம்பம் என்ற ஒன்று உண்டு. அதைக் 'கம்பத்தடிப் பெருமாள்' என்று வழங்குவர். இக்கோயில் வளாகத்தில் ஓர் அழகான புன்னைமரம் உள்ளது. இதில் சிறுவர்கள் ஏறி விளையாடுவார்கள். கோயிலுக்கு மேற்குப் புறத்தில் நல்ல கிணறு ஒன்று உண்டு. இது ஊர் மக்கள் இறங்கி நீராடுவதற்கு நல்லதோர் நீர் நிலை. இந்தக் கோயிலையொட்டி ஏரிக் கரையின் அருகில் வடதிசையில் ஒரு ஃபர்லாங் தொலைவில் பிடாரிக்கோயிலும் அதன் அருகே இராமசாமிக் கோயிலும் உள்ளன. ஊரையொட்டி மேற்புறமாக எல்லையம்மன் கோயில் உண்டு. எல்லையம்மனுக்கும் மாரியம்மனுக்கும் விழாவோ வழிபாடோ நடந்ததை நான் பார்த்ததே இல்லை. கம்பத்தடிப் பெருமாளுக்கு தாசரி (தாதன்) என்ற பெயர் கொண்ட ஒருவரால் நாடோறும் ஒரு முறை பூசை நடப்பதை நான் பார்த்திருக்கின்றேன்.