பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 நினைவுக் குமிழிகள்-1 இந்தத் திண்ணையில் நிரந்தர உறுப்பினராக இருந்தவர் திரு. அருணகிரி ரெட்டியார்; முதியவர். ஒரே மகள்; குழந்தை இல்லை. கணவனுடன் பிணங்கிக் கொண்டு தந்தை வீடு வந்து அதனையே நிரந்தரமாக்கிக் கொண்டவள். தாயின் நிலையிலிருந்து கொண்டு தந்தைக்குப் பணிவிடை செய்து வந்தாள். ஏதோ குறைந்த வருவாயைக் கொண்டு "சுக ஜீவனம் நடத்தி வந்தார் மனைவியை இழந்த அருணகிரியார். உணவு கொள்ளும் நேரம் தவிர, பொழு தெல்லாம் திண்ணையிலேயே கிடப்பார், அடுத்து அதிகமாக வருபவர் கந்துக்கார அருணாசலம். கந்துவட்டியை வசூல் செய்ய அலையும் நேரம் தவிர மீதி நேரத்தை இங்குத்தான் கழிப்பார். இவர்களைத் தவிர முத்து ரெட்டியார் (பெரிய குண்டன்), இராசாமி ரெட்டியார் (சின்னகுண்டன்), சடை ரெட்டியாரின் இரு மக்கள், சில கவுண்டப் பெருமக்கள், உடையார் பெருமக்கள் இவர்களில் சிலர் வந்து வந்து சிறிது நேரம் இருந்து அரட்டை அடித்து விட்டுத் திரும்புவர். நானும் உண்ட நேரம் போகப் பெரும்பாலும் திண்ணை யிலேயே காலம் கழிப்பேன். சனவரி (1937) முதல் ஜூன் வரை-கல்லூரியில் சேரும்வரை-பொட்டணத்தில்தான் என் நிரந்தர வாசம். என் மைத்துனர் இராமசாமி ரெட்டியார் கூட சில சமயம் இந்தச் சோம்பேறி மடத்தில் (திண்ணையில்) வந்து உட்காருவார். அப்பொழுதெல்லாம் திரு. நல்லப்ப ரெட்டியார் (திண்ணைக்குரியவர்) அவருடன் கிண்டல் பேச்சு பேசுவார்; எல்லோரையும் மகிழ வைப்பார். காரணம் என்னைப்போல் (நான் சிறிய பாட்டியின் மகன் வயிற்றுப் பேரன்) அவரும் (பெரிய பாட்டியின் மகன் வயிற்றுப் பேரன்) மாமன் - மைத்துனர் உறவு முறைக்காரர். என் மைத்துனர் நடுப்பாட்டியின் மகள் வயிற்றுப் பேரன்.