பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொட்டண வாழ்வில் சில நிகழ்ச்சிகள் 325 "உனக்கென்னப்பா, நீ சுகவாசி, நீ எதையும் பேசலாம். வேலை இல்லை. கையிருப்பைக் கொண்டு வாழ்கின்றாய். எல்லோரையும் சிரிக்க வைக்கின்றாய்" என்பார் என் மைத்துனர். என் மைத்துனர் நல்லப்ப ரெட்டியாரை மணியாரன் மகன்’, பெரியான்' என்று செல்லமாக அழைப்பது வழக்கம். "உனக்கென்னப்பா. என் கையிருப்பைப் போல் இருபது மடங்கு உங்கள் வீட்டில் உள்ளது. தண்டவாளப் பெட்டியில் இரயில் டிக்கெட் அடைத்து வைத்திருப்பது போல் ஒரே நோட்டு மயம். பெரியபண்ணை, வண்டி வாகனம். தோட்டம் துரவுகள். ஆலாத்துடையாம்பட்டி யிலும் ஒரு பெரிய பண்ணை. அது காமதேனுவைப் போல் தவறாது கொடுத்து வருகின்றது. இவை யெல்லாம் போதாதென்று நீ நிற்க நேரம் இல்லாமல் அலைகின்றாய். ஆசை யாரை விட்டது? உன்னைப் போல் நான் இருந்தால் கால்மேல் கால் போட்டுக் கொண்டு இன்னும் சுகமாக இருப்பேன்’ என்பார். இவர் என் மைத்துணரை “இராமசாமி என்று பெயரிட்டு அழைப்பார். இருவரும் ஒத்த வயதுடையவர்கள். படிப்பு ஐந்தாவது வகுப்பு கூடத் தாண்டாதவர்கள். நான் திருமணம் உறுதியான போது எதையும் பேச வில்லை. வரதட்சிணையைப்பற்றிப் பேச்சே இல்லை; வரதட்சிணை என்பது அக்காலத்தில் நான் கேள்விப்பட்டதே இல்லை. பெண்ணுக்குச் சீர் தரும் வழக்கம் இருந்து வந்தது. அதைக்கூட நான் கண்டு கொள்ளவில்லை. என் அன்னையாரும், இது பற்றி வாயைத் திறக்கவில்லை. ஏதோ பணக்காரர்கள்; வசதி படைத்தவர்கள். என் மகனின் எதிர்கால வாழ்க்கை செளகர்யமாக இருக்கும் என்று கற்பனையில் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம் என்று இப்போது நினைக்கத் தோன்றுகின்றது.