பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

நினைவுக் குமிழிகள்-I

சாவடி உண்டு. இதில் யாரும் அதிகமாக உட்காருவதில்லை. அதன் அருகிலுள்ள பசனை மடத்தில்தான் மாலை - முன்னிரவு நேரங்களில் மூத்தோர் சிலர் கண்ணன்மீது இசைப் பாடல்களைப் பாடி வழிபடுவர். அடக்கமான சிறுவர்கள் சிலர் அவர்கள் அருகில் 'பயபக்தியுடன்' அமர்ந்திருப்பர். பிள்ளையார் கோயில் மேடையில் சிலர் தாயக்கோடு, புலிக்கோடு விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கலாம். அக்காலத்தில் மூத்தவர்களோ இளம் வட்டங்களோ சீட்டாடுவதை நான் பார்த்ததே இல்லை. ஊருக்குக் கிழக்கே ஒரு சாவடி உள்ளது. இதில்தான் இலிங்கி செட்டியார் திண்ணைப் பள்ளிக்கூடம் இருந்தது. இதற்கு முன் இவர் தன் வீட்டிலேயேகூட இத்தகைய பள்ளிக் கூடம் வைத்திருந்தார். இங்கு மணலில்தான் மாணவர்கள் எழுதுவர். திரு. செட்டியார் நல்ல செல்வாக்கு உள்ளவர். தெலுங்கும் தமிழும் கற்பிப்பார். அக்காலத்தில் பிள்ளைகள் இருமொழிகளையும் கற்றனர். எண் சுவடி எல்லோருக்கும் மனப் பாடம். எளிதாகக் கணக்குப் பாடத்தைக் கற்பதற்கு இது பெருந் துணை புரிந்தது. திரு. செட்டியார் ஊர்மக்களுக்கு புரோநோட்டு எழுதுதல், கடிதங்கள் எழுதுதல் போன்ற கைங்கரியங்களைச் 'சிரமதானமாக' வழங்குவதால் இவர் செல்வாக்குக் குறையாமல் இருந்து வந்தது. சில சமயம் தாழை மடல்களில் இலைகள் தைத்து விற்பதும் உண்டு. இந்தச் சாவடித் திண்ணைப் பள்ளிக் கூடத்திற்குச் சற்றுக் கிழக்கே இருப்பது மந்தைவெளி. புல்வெளிக்கு மேயப் போகும் கன்று காலிகளை இவ்விடத்தில் கூட்டுவர் மாடு மேய்க்கும் சிறுவர்கள். இந்த மந்தைவெளிக்குக் கிழக்கே இருப்பது அரிசனச் சேரி. இவர்களின் தொகை கணிசமான அளவில் பெருகியே