பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டப்படிப்பும் நூலகப்பழக்கமும் 411 வதையும் இன்றைய சிறந்த நூலகங்களில் காணமுடிகின்றது. இத்தகைய வாய்ப்புகளையும் வசதிகளையும் ஒரு சிலரே பயன்படுத்துவதையும் காண்கின்றோம். பலர் பயன்படுத்தும் நாள் விரைவில் வரவேண்டும். நான் பயின்றபோது இத்தகைய வசதிகள் திருச்சியில் இல்லை; மாவட்ட நூலகத்தில் இந்த வசதிகள் சிறிதளவே இருந்தன, நூல்களும் அக்காலம் பெருகி இருக்கவில்லை. சில சமயம்தான் இந்நூலகத்திற்குப் போய்வருவதுண்டு; போய் வந்தவரை ஓரளவு பயன் பெற்றேன். இங்கு அதிகமாக நான் படித்தவை திரு.வி.க. வின் ஒரு சில நூல்கள் தாம். கல்லூரி நூலகத்தில் பெற்றுவரும் அறிவியல் நூல்களைப் படிப்ப தற்கும் படித்தவற்றைக் கட்டுரைகளாக வடித்து வைத்துக் கொள்வதற்கும் நேரம் போதாது. இத்தகைய உழைப்பு தேர்வு நோக்கத்தையொட்டியது. மாணாக்கர் வாழ்வில் தேர்வு ஒரு முக்கியக் கூறு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? சில சமயம் விடுமுறையில் கூட இத்தகைய நூல்களை எடுத்துச் சென்று பொட்டணத்தில் என் மாமனார் வீட்டில் படித்துக் கட்டுரைகளை எழுதுவதுண்டு. என் மாமியாருக்கு இது பிடிப்பதில்லை; இதை அவர்தம் முகக் குறியாலேயே என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. “தம் மகளுடன் கொஞ்சிக் குலவுவதை விட்டு இப்படிப் புத்தகங்களைக் கட்டிக் கொண்டு அழுகின்றாரே' என்ற குறிப்பு பேசாத பேச்சாக என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. திருமணம் ஆகி மூன்றாண்டுகள் ஆகியும் பேரன் அல்லது பேத்தியை எடுத்துக் கொஞ்சமுடியவில்லையே என்ற ஏக்கமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்பது என் ஊவ ஆம், அக்கம்பக்கத்தாரிடம் பேசிய பேச்சின் எதிரொலி யும் மெதுவாக என் காதிற்கு எட்டவும் செய்தது. என் ஒன்றுவிட்ட அண்ணன் மனைவியார் இதைக் குறிப்பாக என்னிடம் தெரிவித்ததாக நினைவு கூர முடிகின்றது.