பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 நினைவுக் குமிழிகள்-1 பெரியவர்களின் விருப்பப்படி இரண்டு வாரத்திற்கொரு முறை பொட்டணம் போய் வருவதை வழக்கமாகக் கொண் டிருந்தேன். இது ஆர்வமாகக் கல்வியில் ஈடுபட்டிருந்த எனக்குத் துன்பமாக இருந்தது. என் மனைவிக்கும் நான் கட்டாயமாக வரவேண்டும் என்ற ஆவல் இல்லாதிருந்தது என் நற்பயனாக இருந்தது. என்னைப் போல அவளும் என் படிப்பில் அதிக அக்கறை காட்டியது என் நல் லூழ் ஆகும். இல்லையெனில் இன்பவாழ்க்கையாகிய இல்லறத்தில் குழப்பம் எழும்; மன முறிவு ஏற்படும். இதனால் விளையும் துன்பங்கள் சொல்லி முடியா; உளவியலார் இதுபற்றிக் கூறுவனவற்றை இப்போது நினைந்து பார்க்கின்றேன். 'தொடங்குங்கால் துன்பமாய்' என்ற தொடர் என் மனத்தில் எழுப்பும் சிந்தனையோட்டம் இது: சிறுவனாக இருந்தபொழுது எழுத்து, சொற்கள், சொற்றொடர்கள்- இவற்றை ஒலித்தல், எழுதுதல் போன்ற செயல்களைக் கற்றல்; மொழித்திறன்கள் வளர்த்துக் கொள்வதற்கு ஒரு குழந்தை தொடக்கம் முதல் பெரிய புலவனாகும் வரை அது படும் பாட்டைக் கூர்ந்து கவனித்தால் இத்துன்பநிலை புலனாகும். இப்படியே கணிதம், அறிவியல், பொறியியல், மருத்துவ இயல் இவற்றைக் கற்கும் நிலையைக் கவனித்தால் எல்லையில்லாத துன்பத்தை அநுபவிப்பது தெரியவரும். இவற்றைத் திறமையாகக் கற்றுக் கொள்வதற்கு ஒருசிறுவன் தன் வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்குமுறை கட்டுப்பாடு, தன்னடக்கம், விடாமுயற்சி இவற்றை நினைந்து பார்த்தால் இத்துன்பநிலை விளக்கமடையும். இத்துன்பத்திற்குப் பிறகு ஒவ்வொரு துறையிலும் கற்றுத் துறை போய வித்தகர்களாகத் திகழும்பொழுது பெறும் 'இன்பம்' தெளிவாகும். கல்வியை அடையும்போது பெறும் 14. நீதிநெறி விளக்கம்-3