பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நினைவுக் குமிழிகள்-1 தேவைக்கு மேல் உள்ளவை விற்கப் பெற்றுப் பணமாக்கப் பெறும். குறைவான விலை காரணமாக ஓராயிரம் ரூபாய் கூடக் கிடைக்காது. மிளகாய்த் தோட்டத்திலும் பிற இடங்களில் கறிகாய் கள் ஏராளமாகக் கிடைத்தன. பறங்கி, பூசணி, சருக்கரைப் பறங்கிப் பழங்கள் மாடிமுழுவதும் நிறைந்து கிடக்கும். அவரை, புடல், பீர்க்கன், வெண்டை, கொத்தவரை, பாகல்இவை அவ்வப்பொழுது விற்கப்பெற்று அன்றாடச் செல வுக்குப் பணமாகப் பயன்படும். பறங்கி முதலியவை சேர்ந்தாற்போல் விற்கப்பெறும், வெளியில் அலைந்து திரிந்து உழைத்து அல்லற்படுவது என் தாய்மாமன். வீட்டி லிருந்து கொண்டு அதிகாரம் செய்பவர் என் பாட்டி. இருவருமே ஈகைக் குணம் மிக்கவர்கள். அதனால் இருவரும் பொது விருப்பார்வமிக்கவர்களாகத் திகழ்ந்தனர், ஊர்ப் பெருமக்களும் இவர்களை மிகவும் விரும்பினர்; ஆசை யுடனும் பாசத்துடனும் பழகினர். பால்வளம் : பண்ணையார் வீட்டில் கறவை மாடுகள் இல்லாத நாட்களே இரா. நான் நினைவுகூரும் வகையில் இரண்டு பசுக்களும் மூன்று எருமைகளும் கறந்தன. ஆயர் பாடி போல் வீடு திகழ்ந்தது. பால், தயிர், மோர், நெய் இவற்றிற்கு எப்பொழுதுமே குறைவில்லை. பெரும்பாலும் மோர் தேவையானவர்கள் இலவசமாகவே பெற்றுச் செல்வார்கள். மூன்று வயதிலிருந்தே இன்றுவரை பசும் பால் பருகும் பழக்கமுடையவனாக இருக்கிறேன். மூன்று வயதுடையவனாக இருக்கும்போதே ஒரு டம்லரில் நாட்டுச் சருக்கரை அளவாகப் போட்டு என்பாட்டி என்னை பசு மாட்டிடம் அனுப்புவார்கள். என் தாய்மாமன்தான் பால் கறப்பர்; சில சமயம் என் பாட்டியும் கறப்பதுண்டு. கறக்கும் போது முதலில் என் டம்ளர் நிறைய பால் கறந்துவிடுவார்கள்.