பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நினைவுக் குமிழிகள்-1 சேர்ந்து இருவரிசைக்கிடையே நுழைந்து சென்று அடுத்த கோடியில் வரிசை மாறிச் சேர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் கூரையிலிருந்து தொங்கும் கயிறுகளில் பின்னல் சரியாக அமையும். பின்னல்களில் நாலைந்து வகை உண்டு. இப்போது என் நினைவிற்கு வருவன இரண்டு. ஒன்று, சடைப்பின்னல்'; இது மகளிர் தலையில் கூந்தலில் போட்டுக் கொள்ளும் சடைப் பின்னலைப் போன்றது. மற்றொன்று, சதுரப் பின்னல், சதுரமாக அமையும்; இது மிக அழகாக அமையும். பஞ்சவண்ணக் கயிறுகளால் அமைக்கப்பெற்ற பின்னல் கண்டோர் களிப்பெய்தும் வண்ணம் அமையும். ஒவ்வொரு வகைப் பின்னலுக்கும் சிறுவர்களின் இணை எப்படிச் சென்று எப்படித் திரும்பி வரிசை மாறிச் சேரவேண்டும் என்பதற்கு ஒரு நியதி-ஒரு கணக்குமுறை-உண்டு. இந்த முறைகளில் வழுவாமல் கோலாட்டப் பாட்டுடன் ஆட்டம் நடைபெறும். இரண்டு மீட்டர் நீளம் பின்னல் அமைப்பு முடிந்ததும், பின்னர் பின்னல் அவிழ்க்கப்பெறும். இதில் சிறுவர்கள் சென்றமுறைக்கு எதிர் முறையாகக் கோலாட்டம் அடித்துக் கொண்டே திரும்புவார்கள். பின்னல் அவிழ்ந்து கொண்டே வரும். இந்த முறைகளில் ஏதோ தவறுகள் ஏற்பட்டுவிட்டால் பின்னல் பின்னப்படும்போது ஏற்பட்ட தவறுகள் அது பிரிக்கப்படும்போது தெரிந்துவிடும். பாட்டையும் ஆட்டத்தையும் நிறுத் தி ச் செட்டியார் மாணாக்கர்களைத் தக்கவாறு திரும்பி வருமாறு செய்து பின்னலில் ஏற்பட்ட பிழையை நீக்குவார். பின்னர் ஆட்டம் தொடங்கும்; பின்னலும் அழகாக அவிழ்ந்து கொண்டே வரும். இந்தப் பின்னல் வகைகளில் சதுரப் பின்னல்தான் சிறந்தது; இது சிறப்பாக நடைபெறுவதற்கு சிறுவர்களுக்கு அதிகமான பயிற்சியைத் தருவார் திரு செட்டியார்.