பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நினைவுக் குமிழிகள்-1 சரசுவதி அந்தாதியில் 4,5 வகுப்புகளில் படிப்போர் சில பாடல்களைச் சொல்வர். எல்லோருமாகச் சேர்ந்து ஏதோ சில பாடல்களைப் பாடுவோம். என்ன பாட்டுகள் பாடினோம் என்பது இப்போது நினைவில் இல்லை; ஏதோ பாடினோம் என்பது மட்டிலும் நினைவில் இருக்கின்றது. அவல், பொரி, கடலை (நாட்டுச் சருக்கரை கலந்தது), சுண்டல், வடை கலைமகளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப் பெறும். வடையும் சுண்டலும் ஆசிரியரின் இல்லத்தரசி அன்புடன் செய்து அனுப்புவார்கள். அவர்களும் சிலசமயம் பூசைக்கு வருவதுண்டு. அவர்கள் எல்லோரிடமும் காட்டும் தாய்ப் பாசத்தை இன்றும் நினைத்துப் பார்க்க முடிகின்றது. சரசுவதி பூசைக்கு மறுநாள் விஜயதசமி. அந்த ஊரில் அம்பு போடுவதற்கு பசனை மடத்திலுள்ள கிருஷ்ணன் படத்தைத் தவிர வேறு திருக்கோயில்களில் திருமேனிகள் இல்லை. ஆகவே, அந்தப் படத்தை ஒரு சிறிய சப்பரத்தில் எழுந்தருளப் பண்ணிச் சுமார் இரவு 7; மணிக்குமேல் வெளியில் கொணர்வார்கள். முறைப்படி பெரியவர்கள் அந்த விழாவை நடத்தி முடிப்பார்கள். விசயதசமியன்று ஊருக்கு மேற்புறமுள்ள பிள்ளையார் கோயிலுக்கு முன்புறம் மாலை 4:ம ணிக்கு மேல் சிறுவர்கள் யாவரும் ஒன்று கூடுவார்கள். ஆசிரியர் கற்றுத் தந்த பல்வேறு வகைக் கோலாட்டங்கள் அன்று அரங்கேற்றம் பெறும். ஊர் மக்களில் ஆண்களும் பெண்களும் எங்கள் கோலாட்ட விளையாட்டுகளைப் பார்க்க வந்து கூடி விடுவார்கள். ஆசிரியர் முகத்தில் மகிழ்ச்சிப் பெருக்குக் கொப்புளிப்பதைக் காண்போம். சிறுவர்கள் தவறின்றி ஒன்றாக ஆட வேண்டும் என்ற கவலை ரேகையும் முகத்தில் படர்ந்திருப்பதைப் பெரிய வர்கள் கவனித்து அறிய முடியும். தவறுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மக்கள் சுவைப்பார்கள், நாங்கள் சிறுவர்கள்