பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நினைவுக் குமிழிகள்-1 உயரம்; ஆண் வேடத்திற்குக் களையான முகம். இவருக்கு மன்மதன் வேடம் நன்கு பொருந்தியிருந்ததால், ஆண்டு தோறும் இவருக்கு இந்த வேடம் உரிமையாயிற்று. மன்மதன் வடிவமாக இருக்கும் கரும்புத்துாண்’ எரிக்கப் பெற்றதும், இரதியின் புலம்பல் தொடங்கும்; இரதி வேடம் தாங்கியவர் அற்புதமாக ஒப்பாரி வைப்பார்; கேட்பவர்கள் யாவரும் மிகவும் உன்னிப்பாக ஒப்பாரிப் பாடல்களைக் கேட்டு மகிழ்வர். இதனையடுத்து எரிந்த கட்சி, எரியாத கட்சி என இரண்டு கட்சிகள் தோன்றி வாதங்கள் புரியும். கல்லாவின் கீழ் சிவபெருமான் தென்முகக் கடவுளாக வீற்றிருந்து சனகாதி முனிவர்கட்கு ஞானோபதேசம் செய்த காலத்தில் சிவபெருமான் அம்பிகையை விட்டுத் தனிமையாக இருந்த படியால் உலகில் பிறப்புச் செயல் நின்றுவிட்டது. தேவர்கள், முனிவர்கள் இவர்களின் வேண்டுகோட்கிணங்க மன்மதன் தென்முகக் கடவுள் மீது மலர்க்கணைகளை ஏவி காம உணர்வை எழுப்ப நினைத்தான். இதனால் சலனமுற்ற இறைவன் நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்ததனால் மன்மதன் எரிந்து சாம்பலானான். பின்னர் இரதி தேவியின் வேண்டுகோட்கிணங்க மன்மதன் அவள் கண்ணுக்கு மட்டிலும் புலப்படுவான் என்றும், பிறர் கண்களுக்குப் புலப்படான் என்றும் வரம் ஈந்தார் என்பது கதை. இந்த வரலாற்றையொட்டி எரிந்த கட்சி மன்மதன் எரிந்தே போய் விட்டான் என்று சாதிப்பர். எரியாத கட்சி அவன் எரியாது இன்னும் உயிரோடு உள்ளான் என்று வாதிப்பர். இரு கட்சிகளைச் சார்ந்தவர்களும் தம் கட்சிக் கொள்கைகளுக்கேற்பப் பாடல்களைப் பாடுவர். இக் காலத்தில் நடைபெறும் சிறந்த பட்டிமன்றமும் வியக்கும் வண்ணம் வாதப்பிரதிவாதங்கள் நடைபெறும். ஒப்பாரிப்