பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நினைவு அலைகள் 'பிராமணர், பிராமணர் அல்லாதார் பிரிவினை இல்லையென்பது, உடலில் உள்ள புண்ணை மூடிவைத்து அழுகவிடுவதற்கு ஒப்பாகும். அதற்கேற்ற பரிகாரம் செய்து, உடல் நலத்தைக் கெடுக்கும் புண்ணை ஆற்ற முயல்வதே அறிவாளர்கள் கடமை. 'பொது மக்களில் உள்ள பல பிரிவினர்களுக்கும் நியாயமான பங்குகொடுக்க விரும்பாதவர்களின் கைகளில் காங்கிரசு சிக்கிக்கொண்டு விட்டது. அதில் தொடர்ந்து தொண்டாற்றுவது சமுதாய நீதிக்கு இடையூறாகும் என்று முழங்கிவிட்டு, ஈ.வெ.ரா., எஸ்.இராமநாதன் போன்றோரை மாநாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளியது, நல்லதற்கல்ல. 'ஏதோ சில ஆயிரம் பதவிகள் மட்டுமே உள்ளபோதே, சில பதவிகளை மட்டுமே இழக்கும் சூழ்நிலையிலேயே, பெருமளவு சரியாகப் பங்கு போடுவதைப் பற்றிப் பேசவே மாட்டோமென்பவர்கள் நாளை, இலட்சக்கணக்கான பதவிகள் உருவாகில் நியாயமாகப் பங்கிட்டுப் பதினாயிரக்கணக்கானவைகளை இழக்க ஒப்புக்கொள்வார் களா என்று எண்ணிப் பொதுமக்கள் வீணாக மிரளக்கூடும்.' 'நம்மோடு, தோள் சேர்த்துப் போராட வேண்டியவர்கள், எட்டி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். ஏன்? குறுக்கே நின்று தடுப்பவர்களாக மாறினால், அவர்களை மட்டுமே, சதிகாரர்களாக, தேசத்துரோகிகளாகக் குற்றஞ்சாட்ட முடியாது' என்று ஐந்தாம் தொண்டர், முடிவு சொன்னார். அதோடு, அவர்கள் கலைந்தார்கள். நாங்களும் கலைந்தோம். அறிஞர்களுக்கே, தியாகிகளுக்கே, வழி கண்டுபிடிக்க முடியாமை யையும், ஒற்றுமையைக் கட்டிக் காக்க முடியாததையும் கண்டு, கதிர்வேலுவும் நானும் திகைப்போடு திரும்பினோம். அடுத்த நாள் நாங்கள் மாநாட்டிற்குச் செல்லவில்லை. 15. அரசியலுக்குத் தடை குடியரசு பத்திரிகையின் உதயம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டு நவம்பர் திங்களில் நடைபெற்ற, தமிழ்நாடு மாகாண அரசியல் மாநாடு தமிழ்நாட்டுப் பொது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க திருப்பு முனையாக அமைந்தது. நல்ல திருப்பு முனையா, தீய திருப்பு முனையா என்பது பற்றி, நெடுங்காலம், கருத்து வேறுபாடுகள் நிலவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/172&oldid=786956" இலிருந்து மீள்விக்கப்பட்டது