பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 131 ஆயினும், அது ஒரு பெரிய திருப்புமுனை என்பதை மட்டும் எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள். முதல் நாள் அந்த மாநாட்டிற்குச் சென்ற நான், அடுத்த நாள் செல்லவில்லை. வழக்கம்போல், படிப்பில் ஆழ்ந்து ஈடுபட்டேன். பள்ளிக்கூடத்தில் வைத்துள்ள பாட நூல்களைமட்டும் படிக்க வில்லை. பல்துறை நூல்களையும் உற்சாகமாகப் படிக்கத் தொடங்கினேன். என் தந்தை, நவசக்தி வார இதழை வரவழைத்து வந்தார். காஞ்சி மாநாட்டிற்குப் பிறகு ஈ.வெ.ரா நடத்தி வந்த 'குடியரசு வார இதழையும் வரவழைக்க ஆரம்பித்தார். குடியரசு 2-5-1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தொடக்க விழாவில் குடியரசு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கத்தை ஈ.வெ.ரா. தெளிவுபடுத்துகிறார். 'மற்றப் பத்திரிகைபோல இல்லாமல், மனத்தில் பட்டதைத் தைரியமாய்ப் பொது ஜனங்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். உயர்வு தாழ்வு என்னும் உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து, அனைத்துயிர் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளரவேண்டும்' என்றார். இதை மக்களுக்கு விளக்கவே குடியரசு ஆரம்பிக்கப்பட்டது. 'அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி அரும்பசி யெவர்க்கு மாற்றி மனத்துள்ளே பேதா பேதம் வஞ்சகம் பொய்களவு சூது சினத்தையும் தவிர்ப்பா யாகில்செய்தவம் வேறொன்றுண்டோ? உனக்கிது உறுதியான உபதேசம் ஆகுந்தானே' என்னும் புதுப்பாட்டைத் தலைப்பில் தாங்கி, 'குடி அரசு' உலா வந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் யார்? சிறந்த தமிழறிஞரும் திருப்பாதிரிப் புலியூர் திருமடத்தின் தலைவராக விளங்கியவருமான 'சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமி என்னும் ஞானியார் சுவாமிகள்'தான் குடியரசைத் தொடங்கி வைத்தார். ஆழ்ந்த தமிழ்ப்புலமை பெற்றிருந்த ஞானியார் சுவாமிகள் நல்ல சொற்கொண்டலாக விளங்கினார்கள். அவரிடம் சைவ சமணக் கோட்பாடுகளையும் தமிழையும் கற்றுக்கொண்டு நன்னிலைக்கு வந்த அறிஞர்களும் பெரியோர்களும் பலராவர். ஞானியார் சுவாமிகள், குடியரசு இதழைத் தொடங்கி வைத்தபோது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/173&oldid=786958" இலிருந்து மீள்விக்கப்பட்டது