பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு , 45 திரு. சேஷாசலம் அ ப்யர் என்பவர் நடத்திய கலா நிலையம் என்னும் சஞ்சிகை எனக்குத் தமிழ் இலக்கியத் தொடர்பினை ஏற்படுத்தியது. மறைமலையடிகளார் நடத்திய "ஞானசாகரம்' என்னும் அறிவுக் கடலை'யும் என் தந்தை சில ஆண்டுகள் வாங்கி வந்தார். இதுவும் என் அறிவு விரியச் சிறந்த வழியாயிற்று. பல ஊர் பார்த்திருந்தால் இன்று ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பாதுகாப்பான, குறுகிய வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறேன். என்ன எண்ணங்கள் எழுகின்றன? பாதுகாத்து வளர்த்ததற்கு நன்றியுணர்வு முதலில் தோன்றுகிறது. ஆயினும், பல வெளி ஊர்களுக்குத் தனியாக அனுப்பாவிட்டாலும் அழைத்துக் கொண்டுபோய்க் காட்டியிருந்தால், இன்னும் அதிகத் துணிவு, அதைவிடக் கொடுத்ததை மட்டும் செம்மையாகச் செய்து முடிக்கும் இப்போதைய போக்கிற்குப் பதில் நானே முன்வந்து, பல பொதுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் துடிப்பினையும் பெற்றிருப்பேனே என்னும் ஏக்கமும் பிறக்கிறது. இந்த ஏக்கத்தை ஏன் பதிவு செய்கிறேன்? யாரையும் குறை கூற அல்ல; அழுமூஞ்சிப் போக்கைப் பரப்ப அல்ல. நான் பெற்றதிலும் அதிக இன்பத்தை, வளரும் சமுதாயம் பெறவேண்டும் என்னும் அவாவால்; யான் பெறாத வாய்ப்புகளை இக்கால இளைஞர்களும் வருங்கால இளவரசுகளும் பெற்று, முழு ஆளுமை பெறட்டும் என்னும் விழைவால் எனக்குக் கிட்டாததைச் சுட்டிக் காட்டுகிறேன். கல்விச் சுற்றுலாக்கள் காலம் மாறியுள்ளது. எனக்கும் தெரிகிறது. சென்ற சில ஆண்டுகளாகக், கல்விக் கூடங்களே, கல்விச்சுற்றுலாவிற்கு ஏற்பாடுகள் செய்கின்றன. தனித்தனியே இல்லாவிட்டாலும், குழுக்களாகவாகிலும் பல மாணவர்கள் மாநிலத்தையும் சில வேளை நாட்டையும், மிக அண்மைக் காலத்தில் சில கல்லூரி மாணவிகள் வெளிநாடுகளையும் சுற்றிப் பார்த்து வந்தது, இப்போது நினைவிற்கு வருகிறது. கல்வியை வகுப்பறைகளில் மட்டும் பெறுவதில்லை, பாடங்களைக் கவனமாகக் கேட்டு, மனத்தில் இருத்துவது மட்டுமே கல்வியல்ல. சோதனைக் கூடங்களில் அறிவியல் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து காட்டுவதும் கல்வியின் கூறே ஒழிய முழுமையல்ல. விளையாட்டுத் திடல்களிலும் கல்வியைப் பெறுகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/187&oldid=786977" இலிருந்து மீள்விக்கப்பட்டது